

‘ஏழாம் அறிவு’ திரைப்படத்துக்கு தாமதமாக வரிவிலக்கு அளித்த விவகாரத்தில் ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் விவேக் சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தது. விண்ணப்பித்து 46 நாட்களுக்குப் பின் வரி விலக்கு அளித்ததால், தியேட்டர்களில் படம் வெளியாகி வரி விலக்கு சலுகையால் பயனின்றி போய் விட்டது.
அதே காலகட்டத்தில் வெளி யான, ‘கொண்டான் கொடுத்தான்’ படத்துக்கு எட்டு நாட்களிலும், ‘வழிவிடு கண்ணா வழிவிடு, விளையாட வா, விருதுநகர் சந்திப்பு’ உள்ளிட்ட படங்களுக்கு ஏழு நாட்களிலும், ‘கோகுலம்’ படத்துக்கு ஒரே நாளிலும், ‘தோனி’ படத்துக்கு அதே நாளிலும் வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கம் மற்றும் பாரபட்சம் காரணமாக எங்கள் திரைப்படத்துக்கு வரிச்சலுகை தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. வரிச் சலுகையை எத்தனை நாட்களில் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாததே இதற்கு காரணம். அரசின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. உயர் நீதிமன்றம் சில முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை.
தமிழக அரசு முதலில் தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங் களுக்கு வரிச்சலுகை வழங்கியது. பின்னர், இச்சலுகை பழைய தமிழ்ப் படங்களுக்கும் விரிவுபடுத் தப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு தமிழில் பெயர் உள்ள அனைத்து திரைப்படங்களுக்கும் இச்சலுகை நீட்டிக்கப்பட்டது.
பின்னர் 2011-ம் ஆண்டு தேர்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அக்குழு பரிந்துரைக்கும் படத் துக்கு மட்டுமே வரிச் சலுகை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. படத்தைப் பார்வையிட வணிக வரித்துறை ஆணையர் தலைமை யிலான 22 பேர் குழு அமைக்கப் பட்டது. இக்குழுவைச் சேர்ந்த நான்கு பேர் படத்தைப் பார்த்து பரிந்துரை அளிக்க உத்தரவிடப் பட்டது.
இந்த உத்தரவுகள் எந்த விதி முறைகளையும் பின்பற்றவில்லை. இவை சட்ட விரோதமானவை. பாரபட்சமான இந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து ஆறு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.