

இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி அருகே குல்லு பள்ளத்தாக்கின் லாக்வேலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தம்பதியர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளத்தாக்குகளில் முக்கியமானது குல்லுவேலி. பீஸ் ஆற்றங்கரையில் மணாலிக்கும் லார்கிக்கும் இடையிலான பள்ளத்தாக்கில் இப்பகுதி அமைந்துள்ளது.
மலைச்சரிவும் கிடுகிடு பள்ளங்களும் மிகுந்த இப்பகுதியில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலச்சரிவில் ஒரு வீடும் சிக்கி இடிந்து விழுந்தது. மலைப்பாறைகளின் சிதறல்களும் வீட்டின் இடிபாடுகளுக்குள்ளும் இதில் வசித்து வந்த தம்பதியர் சிக்கிக்கொண்டனர்.
உள்ளூர் அதிகாரிகள் விரைந்து அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். 2 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணியைத் தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.
தற்போது தம்பதியர் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.