Last Updated : 01 Mar, 2019 08:59 AM

 

Published : 01 Mar 2019 08:59 AM
Last Updated : 01 Mar 2019 08:59 AM

‘அபிநந்தனின் படக்காட்சிகளை பரப்ப வேண்டாம்’- பொதுமக்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் வேண்டுகோள்

பாகிஸ்தானில் சிக்கிய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானின் படக்காட்சிகளை சமூக ஊடகங் களில் பரப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ‘வாய்ஸ் ஆப் எக்ஸ்-சர்வீஸ்மென் சொசைட்டி’யின் துணைத்தலைவரும் இந்திய விமானப்படையின் முன்னாள் ஜூனியர் வாரன்ட் அதிகாரியுமான வரதராஜன் கூறும்போது, ‘‘தம் குடும்பத்தில் வயதானவர்கள் நோய்வாய்படுவதையும், காயப் பட்டதையும் படமாக எடுத்து தம் நண்பர்களுக்கு அனுப்ப எவரும் முன்வருவதில்லை. இந்த நிலையில், அபிநந்தன் காட்சிகளை பரப்புவது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற போர்வீரனின் பதிவுகளை அவனது எதிரியால் தான் பகிர முடியும். இந்த புரிதலும் இல்லாமல் நாம் அதை செய்து வருவது வருத்தம் அளிக்கிறது.

ஒரு காட்சியில் தான் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்ற கேள்விக்கு, அபிநந்தன் அதைக் கூற முடியாது என பதிலளித்துள்ளார். ஆனால்,அவருடைய ஊர் மற்றும் குடும்பத்தாரின் விவரங்களை செய்திகளாக சமூக இணையதளங்களில் பரப்புவது என்ன நியாயம்? இது பாகிஸ் தானுக்கு போய் சேராமல் இருக்குமா? இவ்வாறு பரப்புவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும். இதற்கு அரசுகளும் முன்வந்து தடை விதிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்கள் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்தன. காலை 10.30 மணிக்கு ஜம்முவின் ரஜோரி எல்லை வழியாக நுழைந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றன. இவற்றை தடுத்த இரண்டு இந்திய விமானங்களில் ஒன்றான மிக்-21, தொழில்நுட்பக் கோளாறினால் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. அதற்கு முன்பாக அதில் இருந்து தப்பிய மிக்-21 போர் விமானியான அபிநந்தன், பாகிஸ்தான் எல்லையில் சிக்கி விட்டார். இதையடுத்து, அவரை பொதுமக்கள் தாக்கியதும், விசாரணை செய்வதும் வீடியோ படக்காட்சிகளாக சமூக இணையதளங்களில் பரவி வருகிறது. பாகிஸ்தானியர்கள் பரப்பத் துவங்கிய இந்த காட்சிகள் இந்தியாவிலும் பரவி வருகின்றன. இதுபோன்ற செயல் மிகவும் தவறானது எனவும், இவ்வாறு பரப்புவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் ராணுவத்தினர் பொதுமக்கள் மற்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அகில இந்திய முன்னாள் ராணுவத்தினர் சங்கதலைவர் ஜெனரல் சத்பீர் சிங்கூறும்போது, ‘‘பாகிஸ்தானியர்களை போல் முன் யோசனை இன்றி அபிநந்தனின் படக்காட்சி களை இந்தியர்களும் பகிர்வது மிகவும் தவறு. இது நம் நாட்டில் மனரீதியிலானப் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுமக்களுக்கு நாடும் அதை பாதுகாக்கும் ராணுவமும் மிகவும் முக்கியம். இவ்விரண்டுக்கும் முன்னால் எதுவும் இல்லை. இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இந்தியாவிற்கு எதிரான தீவிர வாத நடவடிக்கைகளை நிறுத்திய பிறகுதான் நம் அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கு முன்னாள் ராணுவத்தினர் முழு ஆதரவளிப்பார்கள்’’ எனத் தெரிவித்தார்.

அபிநந்தன் காட்சிகளுடன் பாகிஸ்தான் தங்கள் படையினர் வீழ்த்தியதாக ஒரு போர்விமானம் விழுந்து கிடக்கும் காட்சியையும் வெளியிட்டது. இது, கடந்த 2016-ல்ராஜஸ்தானின் ஜோத்பூரில் தொழில்நுட்பக் கோளாறினால் விபத்துக்குள்ளான மிக்-21 விமானம். இதன் வால்புறம் உள்ள எண்ணும், பாகிஸ்தான் தற்போது அனுப்பியப் படக்காட்சியில் இடம்பெற்ற விமான எண்ணும் ஒன்றாக உள்ளன. இதை வைத்துஅது இந்தியாவில் நடந்த பழையசம்பவம் எனக் கண்டுபிடிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x