‘மிஷன் சக்தி’: பிரதமர் மோடியின் உரை தேர்தல் விதிமீறலா? - ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை

‘மிஷன் சக்தி’: பிரதமர் மோடியின் உரை தேர்தல் விதிமீறலா? - ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
Updated on
1 min read

மிஷன் சக்தி திட்டம் வெற்றி பற்றி பிரதமர் மோடி ஆற்றிய உரை தேர்தல் விதிமீறலா என்று ஆராய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

300கிமீ தொலைவில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விண்வெளியில் உள்ள செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியதை பிரதமர் மோடி அறிவித்து உரையாற்றினார்.

முன்னதாக, பிரதமர் மோடி தனது டவிட்டர் பக்கத்தில் "இன்று நண்பகல் 11.45 முதல் 12  மணிக்குள் முக்கியத் தகவலுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளேன். தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் பாருங்கள்" என்று தனது ட்விட்டரில் பதிவு செய்தார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பிரதமர் மோடி நேரலையில் பேசினார். அப்போது அவர், "விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.மிஷன் சக்தி என்று இந்த ஆப்ரேஷனுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

வெறும் 3 நிமிடங்களில் மிஷன் சக்தி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக்கோள்களைக் காக்கும் முயற்சியே தவிர மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல் இல்லை. மிஷன் சக்தி நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும்" எனப் பேசினார்.

அவரின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில் மிஷன் சக்தி தொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டர் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேரு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.  விஞ்ஞானிகள் சாதனையை தேர்தல் சுயலாபத்துக்கு ஒரு பிரதமர் பயன்படுத்தலாமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து திரிணமூல் காங்கிரஸ், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம் என்று கூற சீதாராம் யெச்சூரி ஆணையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் தன் ட்விட்டரில், “தேசத்துக்கு மின்னணு ஊடகம் மூலம் பிரதமர் ஆற்றிய உரை பற்றி தேர்தல் ஆணையம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்து இது தேர்தல் நடத்தை விதிமீறலா என்று ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

தேசப்பாதுகாப்பு தொடர்பான விஷயங்களோ, பேரிடர் நிர்வாகம் தொடர்பான விஷயங்களோ, தேர்தல் நடத்தை விதிமுறை வரம்புக்குள் வராது என்று பாஜகவினர் கூறிவரும் நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in