Last Updated : 24 Mar, 2019 01:50 PM

 

Published : 24 Mar 2019 01:50 PM
Last Updated : 24 Mar 2019 01:50 PM

மோடிக்கும் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் என்னவென்று தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்று, சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்தவர் சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நகரில், 'ஆனுவல் கொல்கத்தா டயலாக் 2019' நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது என்று மோடியும், ஜேட்லியும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து 3-வது இடத்தில இந்தியா இருக்கிறது அவர்களுக்குத் தெரியுமா?

உலக அளவில் மக்களின் வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட வேண்டும். இதுதான் அறிவியல் ரீதியாக, பொருளாதார  ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அவ்வாறு பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் இருக்கிறது.

ஆனால், ஏன் நமது பிரதமர் மோடி இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். இது ஏன் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவருக்கும் பொருளாதாரம் தெரியாது. நிதியமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியாது.

அந்நிய செலாவணி அடிப்படையில்தான் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது. அதைவைத்து நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடக்கூடாது. செலாவணி மதிப்பில் ஏற்றம் இறக்கம் இருப்பது இயல்பானது என்று விளக்கமாகக் கூறி மோடிக்குக் கடிதம் எழுதினேன். மோடி சொல்வதுபோல் செலாவணி மதிப்பில் கணக்கிட்டால்கூட இந்தியா 6-வது இடத்தில் இருக்காது, 7-வது இடத்தில்தான் இருக்கிறது.

ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவைக் கணக்கிட சரியான வழி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்துக் கணக்கிடுவதுதான். அந்த வகையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் உலக அளவில் இந்தியா இருக்கிறது. காலனி ஆதிக்கத்துக்குப் பின் செழிப்பான நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது''.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x