கேரளாவில் முக்கிய தொகுதிகளை பெற பாஜக தலைவர்களிடையே கடும் மோதல்: சமரசம் செய்யும் ஆர்எஸ்எஸ்

கேரளாவில் முக்கிய தொகுதிகளை பெற பாஜக தலைவர்களிடையே கடும் மோதல்: சமரசம் செய்யும் ஆர்எஸ்எஸ்
Updated on
2 min read

மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களாக களமிறங்க பாஜக மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டுள்ளது.

பாஜகவுக்கு அதிகமான வாக்கு வங்கி உள்ள திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மிசோரம் மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சசி தரூரை எதிர்த்து களம் இறங்க பலமான வேட்பாளர் தேவை என்பதால் இந்த தொகுதியில் கும்மனம் ராஜசேகரனை போட்டியிட வைக்க பாஜக முடிவு செய்துள்ளது.

பத்தனம்திட்டா தொகுதியில் கடந்த முறை பாஜக வேட்பாளர் ரமேஷ் போட்டியிட்டு ஒரு லட்சத்து 38 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியை பெறுவதில் பாஜக முன்னணி தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. சபரிமலை போராட்டத்தால் இந்த தொகுதியில் தங்கள் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளதாக பாஜக கருதுகிறது.

கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, ரமேஷ், பொதுச்செயலாளர் சுரேந்திரன், மற்றொரு பொதுச்செயலாளர் ஷோபா சுரேந்திரன் ஆகியோர் விரும்புகின்றனர். அதேசமயம் தற்போது மத்திய அமைச்சராக உள்ள அப்போன்ஸ் கண்ணன்தானமும் இங்கு போட்டியிட விரும்புகிறார். ஆர்எஸ்எஸ் தலையிட்டு சமரசம் செய்து வருகிறது. அதன்படி ஸ்ரீதரன் பிள்ளை அல்லது சுரேந்தின் இங்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அல்போன்ஸை எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

காங்கிரஸில் இருந்து சமீபத்தில் விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த டாம் வடக்கன், சாலக்குடி அல்லது கொல்லம் தொகுதியில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. கடந்தமுறை பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 36 ஆயிரம் வாக்குகள் பெற்ற ஷோபா சுரேந்திரன் இந்த முறை ஆற்றின்கல் தொகுதி அவருக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநில பாஜகவின் மூத்த தலைவர்களான ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், சி.கே.பத்மநாபன் ஆகியோருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம் மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையின் ஆதரவாளரான கிருஷ்ணதாஸூக்கு தேர்தலில் போட்டியிட இந்தமுறை வாய்ப்பு கிடைக்காது எனவும் கூறப்படுகிறது.

வேட்பாளர் யார் என்பது முடிவாகாததால் தொண்டர்கள் இடம் பிடித்து சுவர் விளம்பரம் செய்துள்ள நிலையில் அதில் வேட்பாளர் பெயர் மட்டும் விட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை நாளை வெளியிடும் என மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in