

ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 மணிநேரமாக தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சண்டையில் 2 சிஆர்பிஎப் வீரர்கள், 2 போலீஸார், ஒரு பொதுமக்கள் என 5 பேர் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் கிராமத்தில் தீவிரவாதிகள் பலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் அந்த கிராமப் பகுதியை பாதுகாப்புப் படையினர், காஷ்மீர் போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதில் வீடுகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த என்கவுன்ட்டரில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தாலும், அதை உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
மேலும், வீடுகளில் இருந்து தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால், எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் எனத் தெரியாமல் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை நிறுத்தாமல் தொடர்ந்தனர்.
இதற்கிடையே கடந்த 60 மணிநேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்தனர். அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்கிற விவரம் தெரியவில்லை, அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர், காஷ்மீர் போலீஸார் இருவர், பொதுமக்கள் ஒருவர் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்த பொதுமக்கள் இருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.