Published : 02 Mar 2019 07:50 AM
Last Updated : 02 Mar 2019 07:50 AM

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி நாடு திரும்பினார்; வாகா - அட்டாரி எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன்  நேற்று விடுதலை செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம், வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்றிரவு அவர் நாடு திரும்பினார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண் டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கி.மீ. ஊடுருவிய இந்திய போர் விமானங்கள் பாலகோட், முஷாபராபாத், சாகோட்டி ஆகிய 3 இடங்களில் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழித்தன. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

போர் பதற்றம்

இதைத் தொடர்ந்து இருநாடு களுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 27-ம் தேதி பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் காஷ்மீரின் ரஜவுரி பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயன்றன. அந்த விமானங்களை இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த வான்வெளி சண்டையின் போது பாகிஸ்தான் போர் விமானங்களை அவர்களின் எல்லைக்கே சென்று இந்திய போர் விமானங்கள் விரட்டின. இந்திய விமானி அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை விரட்டிச் சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு பாகிஸ்தான் போர் விமானத்தின் ஏவுகணை, அபிநந்தனின் விமானத்தை தாக்கியது. பாராசூட் உதவியுடன் அவர் உயிர் தப்பினார். ஆனால் அவர் தரையிறங்கியது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹோரா கிராமம் ஆகும். இது இந்திய எல்லையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்து ராவல்பிண்டியில் உள்ள அந்த நாட்டு ராணுவ தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றது. ஜெனீவா உடன்படிக்கையின்படி எதிரி நாடுகளிடம் பிடிபடும் வீரரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வீரரை கொலை செய்வதோ, அடித்து துன்புறுத்துவதோ கடும் குற்றமாகும்.

சர்வதேச நிர்பந்தம்

இந்திய விமானி அபிநந்தன் பாராசூட்டில் கீழே இறங்கியபோது அந்தப் பகுதி மக்களும் ராணுவ வீரர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. முகத்தில் ரத்த காயத்துடன் அவர் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது. ஜெனீவா உடன்படிக்கை மீறப்பட்டிருப்பதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின.

இதனிடையே விமானி அபிநந்தனை மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் கடந்த 27-ம் தேதி உயர்நிலை ஆலோசனை நடத்தினார். அவரது ஆலோசனையின்பேரில் சர்வதேச நாடுகளிடம் இந்தியா ஆதரவு கோரியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஜெனீவா உடன் படிக்கையின்படி அபிநந்தனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை வலியுறுத்தின. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா நடுநிலை வகித்தது.

இம்ரான் கான் அறிவிப்பு

இந்தப் பின்னணியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான், "நல்லெண்ண அடிப்படையில் விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படுவார்" என்று அறி வித்தார்.

அவரை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்காத பாகிஸ்தான் அரசு, சாலை மார்க்கமாகவே அபிநந்தன் அனுப்பப்படுவார் என்று தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து பாகிஸ் தானுக்கான இந்தியாவின் செயல் தூதர் கவுரவ் அலுவாலியா நேற்று இஸ்லாமாபாத் வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்று சட்ட பூர்வ நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்தார். இதன்பிறகு நேற்று மாலை 3 மணி அளவில் ராவல் பிண்டி ராணுவ தலைமையகத்தில் அபிநந்தன் விடுதலை செய்யப் பட்டார்.

எல்லையில் கொண்டாட்டம்

அங்கிருந்து அவர் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சாலை மார்க்கமாக பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அபிநந்தன் வந்தார். இந்திய தூதரக அதிகாரிகளும் அவருடன் இருந்தனர். அங்கு செஞ்சிலுவை சங்கம் தரப்பில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. போர்க்கைதி என்ற அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் பல்வேறு சட்டபூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இதனால் பல மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

அதன்பின் இந்திய எல்லை யான அட்டாரியில் நேற்றிரவு 9.30 மணிக்கு இந்திய தரப்பிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட் டார். விமானப்படையின் உயரதி காரிகளான ஏர் வைஸ் மார்ஷல்கள் பிரபாகரன், ரவி கபூர் ஆகியோர் அபிநந்தனை வரவேற்றனர்.

அட்டாரி எல்லையில் நேற்று காலை முதலே பெருந்திரளான மக்கள் குவிந்திருந்தனர். இரவிலும் கூட்டம் குறையவில்லை. அட்டாரி எல்லைக்கு அபிநந்தன் வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரம் செய்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது விடுதலையை காலை முதலே பொதுமக்கள் ஆடல், பாடலுடன் கொண்டாடினர். இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். அவரது புகைப்படத்துக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.

அட்டாரியில் இருந்து கார் மூலம் அமிர்தசரஸுக்கு அபிநந்தன் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் விமானப் படை விமானம் மூலம் நேற்றிரவு அவர் டெல்லி சென்றார்.  

'விமானப்படை மகிழ்ச்சி'

அட்டாரி எல்லையில் விமானி அபிநந்தனை, இந்திய விமானப் படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே. கபூர் வரவேற்றார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் முறைப்படி ஒப் படைக்கப்பட்டுள்ளார். அவர் நாடு திரும்பியதில் இந்திய விமானப்படை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. மருத்துவ பரிசோதனைக்காக அவர் டெல்லி அழைத்துப் செல்லப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அபிநந்தன் விடுதலை செய் யப்பட்ட சில நிமிடங்களில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஜெய் ஹிந்த்' என்று பதிவிட்டார்.

விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி

இந்திய விமானி அபிநந்தன் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

இந்த முடிவை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை வழக்கு தொடரப்பட்டது. அதில், "பாகிஸ்தானுக்கு எதிராக விமானி அபிநந்தன் குற்றம் இழைத்துள்ளார். பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.  அவரை விடுதலை செய்யக்கூடாது. அவர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசின் வெளியுறவு கொள்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மிக் 21 போர் விமான குடும்பம்

விமானி அபிநந்தனின் தந்தை ஏர்மார்ஷல் வர்த்தமான் இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பணமூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்.

ஏர் மார்ஷல் வர்த்தமான் குறித்து அவரது நண்பர் நவ்லே கூறியபோது, "நானும் வர்த்தமானும் விமானப் படையில் ஒரே காலத்தில் பணியாற்றினோம். கடந்த 1969-72-ல் தேசிய பாதுகாப்பு அகாடமியில் ஒன்றாக பயிற்சி பெற்றோம். பயிற்சிக்குப் பிறகு நான் ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றினேன். வர்த்தமான் மிக் 21 ரக விமானியாக பணியாற்றினார்" என்று தெரிவித்தார்.

தந்தை வர்த்தமானை பின்பற்றி மகன் அபிநந்தனும் விமானப் படையில் இணைந்தார். தந்தையை போன்றே மிக் 21 ரக விமானியாக பணியாற்றி வருகிறார். 34 வயதாகும் அவர் சுமார் 16 ஆண்டுகள் போர் விமானியாக பணியாற்றி உள்ளார். சுகோய் 30 போர் விமானத்தை ஓட்டுவதிலும் கைதேர்ந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x