

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசியதாவது: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும் என்பது உறுதியாகிவிட்டது. எனவே, தேர்தலுக்கு முன்பாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்படும். அப்போது, அவற்றில் முறைகேடு ஏதும் நடைபெற்றிருக்கிறதா என்பது குறித்து தேசியவாத கட்சியினர் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல், தேர்தல் நடைபெறும் சமயங்களிலும், நமது கட்சியினர் வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று முறைகேடுகள் நடைபெறாமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சரத் பவார் பேசினார்.