Last Updated : 25 Mar, 2019 01:11 PM

 

Published : 25 Mar 2019 01:11 PM
Last Updated : 25 Mar 2019 01:11 PM

37 ஆண்டுகளில் முதல் முறை: தெலங்கானா மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியில்லை; பின்வாங்கும் சந்திரபாபு நாயுடு?

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடப் போவதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்டு கடந்த 37 ஆண்டுகளில் அக்கட்சி  மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது. தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி வலுவாக இருக்கிறது. மாநிலம் பிரிக்கப்பட்டபபோது ஆட்சியைப் பிடித்த சந்திரசேகர் ராவ், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார். 119 இடங்களில் 100 இடங்களில் வென்று அசுரபலத்துடன் சந்திரசேகர் ராவ் ஆட்சியில் இருக்கிறார்.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி  போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தது. 13 இடங்களில் இரு இடங்களில் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி வென்றது.

இதனால், விழித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறார்.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் டிஆர்எஸ் அசுர பலத்துடன் இருக்கிறார்.  சமீபத்தில் வெளியான பல்வேறு  கருத்துக் கணிப்புகளில் 17 இடங்களில் 16 இடங்கள் வரை டிஆர்எஸ் கட்சி கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுவதாக அறிவித்து, 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது. ஆனால், நாளுக்கு நாள் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் டிஆர்எஸ் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.

இதனால் தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி மிகுந்த பலவீனமடைவதால்,  மக்களவைத் தேர்தலில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா மாநிலத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு முயற்சித்தார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை.  இடதுசாரிகள் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதால், தெலுங்கு தேசம் கட்சி தெலங்கானா மாநிலத்தில் தனித்து விடப்பட்டுள்ளது.

ஒருவேளை தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் போட்டியிடப் போவதாக முடிவு எடுத்தால், தெலுங்கு தேசம் கட்சி கடந்த 1982-ம் ஆண்டுக்குப் பின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது இதுதான் முதல்முறையாகும்.

சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல்குழு உறுப்பினரும், கம்மம் தொகுதி வேட்பாளரான நாகேஸ்வர ராவ் கடந்த சில நாட்களுக்கு முன் டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். இது தெலுங்கு தேசம் கட்சிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதுபோல் ஏராளமானோர் டிஆர்எஸ் கட்சியை நோக்கி நகர்வதால், தோல்வி உறுதி எனத் தெரிந்து சந்திரபாபு நாயுடு இந்த முடிவு எடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் எல் ராமண்ணா கூறுகையில், "தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவ செய்யவில்லை. அதைக் கட்சியின் தலைமை நாளை முடிவு செய்யும். அவ்வாறு போட்டியிட்டாலும் எத்தனை இடங்கள் வெல்ல முடியும் என்பதும் தெரியவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் போட்டியிட்டால் நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்திப்போம் என்று கருதி முன்கூட்டியே போட்டியிடாமல் சந்திரபாபு நாயுடு  பின்வாங்குகிறாரா என்று அரசியல்வட்டாரங்களில் பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x