

இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.
இந்த முறைகேட்டில் துபாயில் இருந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைக்கேல் நேற்று சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது திகார் சிறையில் புதன்கிழமை முதல் 2 நாட்களுக்கு மைக்கேலிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்தார். முன்னதாக நீதிமன்றத்தில் மைக்கேல் கூறும்போது, “சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா துபாயில் என்னை சந்தித்தபோது, விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சிறை வாழ்க்கை நரகமாகிவிடும் என மிரட்டினார். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் 16-17 பேருடன் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனது அறைக்கு பக்கத்து அறையில் தாதா சோட்டா ராஜன் அடைக்கப்பட்டுள்ளார்” என புகார் தெரிவித்தார்.