

மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மனைவி தேஜஸ்வினி மீது பாகல்கோட்டை நகர போலீஸார் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அனந்த் குமாரின் மனைவி தேஜஸ்வினி தலைமையிலான அறக்கட்டளைக்கு சொந்தமான ‘அம்ருதா தொழில்நுட்பக் கல்லூரி' இயங்கி வருகிறது. பெங்களூரை அடுத்துள்ள பிடதியில் இருக்கும் இந்த கல்லூரி, கடந்த ஆண்டு பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள பசவேஸ்வரா வித்யா வர்க்க சங்கத்துடன் இணைக்கப்பட்டது.
கல்லூரி கைமாறியதில் ரூ.24 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக பசவேஸ்வரா வித்யா வர்க்க சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் மில்லனா ஜுகர் கடந்த ஜூன் மாதம் பாகல்கோட்டை போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்காததால் பாகல்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை 19-ம் தேதி, 'மில்லனா ஜுகரின் புகார் குறித்து விரிவான அறிக்கை தாக் கல் செய்யும்படி பாகல்கோட்டை போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தேஜஸ்வினி மற்றும் பசவேஸ்வரா வித்யா வர்க்க சங்கத்தின் தலைவராக இருந்தமுன்னாள் பாஜக எம்.எல்.ஏ. வீரண்ணா உள்ளிட்ட ஐந்து பேர் மீது பாகல்கோட்டை போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே அனந்தகுமார் உடனடியாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இளைஞர் காங்கிரஸார் மைசூர், மங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
பணமோசடி புகார் குறித்து செய்தியாளர்களிடம் தேஜஸ்வினி பேசும்போது, “நான் இன்னும் முதல் தகவல் அறிக்கையை படிக்கவில்லை. அம்ருதா தொழில்நுட்பக் கல்லூரி விவகாரத்தில் எவ்வித பண மோசடியிலும் ஈடுபடவில்லை. எங்களது வங்கி கணக்குகளும், பண பரிவர்த்தனைகளும் வெளிப்படையானவை. அரசியல் உள்நோக்கத்துடன் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.