

பிஹார் மாநில இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் ஜார்க்கண்டின் சட்டசபைத் தேர்தலுக்காக மாபெரும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது.
இதற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா மற்றும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் கவுடா கூறும்போது, “முற் போக்கான, ஒத்த சிந்தனையுள்ள அரசியல் கட்சிகளுடன் கூட்டு வைக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது எனவே, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்மூலம் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறாமல் தங்களது கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புகின்றனர்” என்றார்.
இந்த கூட்டணிக்காக காங்கிரஸின் மூத்த தலைவர்களான அகமது பட்டேல், திக்விஜய் சிங் மற்றும் ஏ.கே.அந்தோணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில், அம்மாநிலத்தின் பெரிய கட்சியான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான பாபுலால் மராண்டியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது 13 காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜார்க்கண்டில் சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி செய்து வருகிறது.
இங்கு பாஜகவுக்கு 18 உறுப்பினர்கள் மட்டும் இருப்பினும் மக்களவை தேர்தலில் அதற்கு கிடைத்த வெற்றி சட்டசபையிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தடுக்கும் வகையில் பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் அமைத்தது போல், ஜார்க்கண்டில் ஒரு மாபெரும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயன்று வருவதாகக் கருதப்படுகிறது.