Last Updated : 23 Mar, 2019 04:13 PM

 

Published : 23 Mar 2019 04:13 PM
Last Updated : 23 Mar 2019 04:13 PM

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி

உத்தரப்பிரதேசம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து, தமிழகத்தில் இருந்து 111 விவசாயிகள் போட்டியிட உள்ளனர் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார்.

திருச்சியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு நிருபரிடம் கூறியதாவது:

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் டெல்லியில் 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். விவசாயிகள் சங்கங்கள் திரண்டு பேரணி நடத்தினோம். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

ஆதலால், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழகத்தில் இருந்து 111 விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.  பாஜகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கோரிக்கையை சேர்க்கக் கூறி வலியுறுத்துவோம். விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க நாடுமுழுவதும் மக்களும், அனைத்து இந்திய விவசாயிகள் சங்க ஒத்துழைப்பு குழுவும் தயாராக இருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக இல்லாமல் மோடிக்கு எதிராக நாங்கள் களமிறங்கக் காரணம், இன்னும் பாஜகதான் ஆளும் கட்சியாக இருக்கிறது, மோடிதான் பிரதமராக இருந்து வருகிறார்.

தமிழகத்தில் திமுக, அமமுக கட்சிகள் விவசாயிகள் கடனைமுழுமையாக தள்ளுபடி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்கள். கடன் தள்ளுபடி செய்ய கோருவதும் எங்கள் கோரிக்கைதான். நாங்கள் பாஜக அல்லது மோடிக்கு எதிரானவர்கள் அல்ல.

ஆட்சிக்கு வரும் முன், எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று  வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவிடாமல் பிரதமர் மோடியை எது தடுக்கிறது. வேட்புமனுத்தாக்கலுக்காக நாங்கள் 300 விவசாயிகள் வாரணாசிக்கு ரயில் டிக்கெட் எடுத்துள்ளோம்.

திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பலமாவட்டங்களில் இருந்து தமிழக விவசாயிகள் வாரணாசி செல்ல உள்ளோம். எங்களின் கோரிக்கை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்று, தமிழகத்தின் ஒரே பாஜக எம்.பி. பொன் ராதாகிருஷ்ணன் வாக்குறுதி அளித்தால், நாங்கள் எங்கள் முடிவை பரிசீலணை செய்வோம் " இவ்வாறு அய்யா கண்ணு தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x