Published : 11 Mar 2019 08:57 PM
Last Updated : 11 Mar 2019 08:57 PM

தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

சபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான  பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தின. கேரள அரசைக் கண்டித்து  நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.  சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசன காலம் வரையிலுமே இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மக்களவைத் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏப் 23-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்று, மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் சில அரசியல் கட்சிகள் சபரிமலை விவகாரத்தை கையில் எடுக்கும் என கூறப்படுகிறது. ஆனால் மத உணர்வு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சபரிமலை விவகாரத்தை மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தக்கூடாது. இது தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிரானது. பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை பேசி மத உணர்வுகளை தூண்டிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x