Last Updated : 18 Mar, 2019 01:29 PM

 

Published : 18 Mar 2019 01:29 PM
Last Updated : 18 Mar 2019 01:29 PM

மே.வங்கத்தில் 4 முனைப் போட்டி:இடதுசாரிகளுடனான கூட்டணி பேச்சை கைகழுவியது காங்கிரஸ்

மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் இடையிலான கூட்டணிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி  ஏற்பட்டுள்ளது

கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தும், தொகுதி பிரிப்பதில் இரு தரப்பும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பதால், கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சைக் கைவிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்கிறது.

மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி, இடதுசாரிகளையும், பாஜகவும் கடுமையாக எதிர்த்து வந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. அதேசமயம், கூட்டணி குறித்தும் எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. சமீபத்தில் சிபிஐ அமைப்பையும், பாஜகவையும்  எதிர்த்து மம்தா பானர்ஜி போராட்டம் நடத்திய போது காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது, ஆனால், இடதுசாரிகள் ஒதுங்கியே இருந்தனர்.

காங்கிரஸ் கட்சியும்  பாஜகவைத்தான் மாநிலத்தில் தீவிரமாக எதிர்த்து வருகிறது, ஆனால்,  திரிணமூல் காங்கிரஸ் கட்சியையோ , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ எதிர்க்கவில்லை. இதனால், இந்த மூன்று கட்சிகளுக்கும் பொது எதிரியாக பாஜக மட்டுமே பார்க்கப்படுகிறது.

இதனால், பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் நோக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து பேச்சு நடத்தி வந்தது.

ஆனால், தனித்துப் போட்டி என்ற தன்னுடைய நிலைப்பாட்டில் வலுவாக இருக்கும் மம்தா பானர்ஜி 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இதனால், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாகும் என்று பேசப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த இருதரப்பு பேச்சில் எந்த விதமான உடன்பாடும் எட்டாததால், பேச்சு கைவிடப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா கூறுகையில், " எங்களுடைய தகுதிக்கு குறைவாக எந்தவிதமான கூட்டணியையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கட்சி முடிவு செய்துள்ளது. எங்களுடைய வேட்பாளர் யார், யார் போட்டியிடுவது, போட்டியிடக்கூடாது என்று இடதுசாரிகள் தீர்மானிக்க முடியாது.

 ஆதலால், நாங்கள் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுகிறோம். இனி இடதுசாரிகளுடன் பேச்சு இல்லை. கூட்டணி தர்மத்தையும் பின்பற்றி அவர்கள் நடக்கவில்லை. இன்று இரவுக்குள் மூன்று கட்ட தேர்தலுக்கான  வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம் " எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சூர்ய காந்த் மிஸ்ரா, இந்த விவகாரம் குறித்து கருத்து ஏதும் கூற மறுத்துவிட்டார்.

பேச்சுதோல்விக்கு காரணம்

ஒருபக்கம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்திக்கொண்டே, மறுபுறம், இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டனர். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், எந்தெந்த தொகுதிகளில் தங்களுக்கு சாதகமோ அந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சியை கலக்காமல் அறிவித்துவிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு  பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதால், பேச்சு தோல்வியில் முடிந்தது.

இதனால், மேற்குவங்கத்தில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

பாஜகவுக்கு சாதகம் ?

மாநிலத்தில் பாஜகதான் அனைத்துக் கட்சிகளுக்கும் பொது எதிரியாக இந்த தேர்தலில் தொடக்கத்தில் இருந்தது. இதனால் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் பாஜகவை எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற கணிப்பு நிலவியது. ஆனால், இப்போது 4 முனைப் போட்டி நிலவுவதால், வாக்குகள் பல்வேறு தொகுதிகளிலும் சிதறும்போக்கு காணப்படுகிறது. இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியிடையிலான கூட்டணிப் பேச்சு முறிவு, இறதியில் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x