Published : 12 Mar 2019 02:34 PM
Last Updated : 12 Mar 2019 02:34 PM

மக்களவைத் தேர்தலில் களமிறங்கும் கம்பீர்; புதுடெல்லியில் பாஜக வேட்பாளராக போட்டி?

முன்னாள் கிரிகெட் வீரர் கவுதம் கம்பீர், மக்களவைத் தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் மொத்தமாக 7 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த முறை அதில் ஒரு தொகுதியில் கம்பீர், பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டாலும், அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.

பிரபல கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து கூறி வருகிறார்.

ஆம் ஆத்மி நாளிதழ்களில் அளித்த விளம்பரம் குறித்து அவர் காட்டமாக விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார். ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு பொறுப்பு ஏற்பதாக கூறியிருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் அமித்சரில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லிக்கு ஆதரவாக கம்பீர் பிரசாரம் செய்தார்.

இதனால் அவரை பாஜக தேர்தலில் களம் இறக்க முயன்று  வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக கம்பீர் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்தமுறையை போலவே, மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற திட்டமிட்டு வருகிறது.

இதனால் 7 தொகுதகளிலும் வலிமையான வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி திட்டமிடுகிறது. அதன் ஒருபகுதியாகவே கவுதம் கம்பீர் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில்தான் கம்பீருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x