

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் பொருட்டு உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் 26-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் மத்தியஸ்ர்கள் மூலம் தீர்வு காண நீதிமன்றம் விரும்புவதாகவும் இதுதொடர்பான உத்தரவை மார்ச் 6-ம் தேதி பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மார்ச் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்து மகாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்தியஸ்தர்கள் மூலம் பிரச்சினைக்கு தீ்ர்வு காண எதிர்ப்பு தெரிவித்தார். உத்தர பிரதேச அரசின் தரப்பிலும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் முடிவு இந்த வழக்குக்கு பொருத்தமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது.
அதுபோலவே வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தம் என்பதால் இந்த வழக்கில் மத்தியஸ்தர்கள் உதவியை நாட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து மத்தியஸ்தர்களை சம்பந்தப்பட்ட தரப்பினரே பரிந்துரை செய்யலாம் என கூறிய நீதிபதிகள், இதற்கான உத்தரவு பிறப்பிப்பதை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் வழக்கில் மத்தியஸ்தர்கள் நியமனம் செய்வது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் நாளை பிறப்பிக்கும் என தெரிகிறது.