

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு கடந்த 2010-ம் ஆண்டு நற்சான்று அளித்தவர்தான், இப்போதுள்ள தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் என்று பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரை, மசூத் அசார்ஜி என்று மரியாதையுடன் ராகுல் காந்தி அழைத்ததற்கு பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது. அதற்குப் பதிலடியாக காங்கிரஸ் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, வாஜ்பாய் ஆட்சியில் காந்தகார் விமானக் கடத்தலின்போது தீவிரவாதி மசூத் அசார், அகமது ஓமர் சயித் சேக், முஷ்டாக் அகமது ஜர்கர் ஆகியோரை விடுவித்து பயணிகளை மீட்டது. இவர்களை அஜித் தோவல்தான் விமானத்தில் கொண்டுசென்று ஒப்படைத்தார் என்று பேசியிருந்தார்.
அப்போது மசூத் அசாரை, மசூத் அசார்ஜி என்று மரியாதையுடன் அழைத்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த ட்விட்டரில், கடந்த 2010-ம் ஆண்டு அஜித் தோவல் அளித்த பேட்டி குறித்த ஆவணங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.
அதில், கடந்த 2010-ம் ஆண்டு நாளேடு ஒன்றுக்குபேட்டி அளித்த அஜித் தோவல், ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாருக்கு நற்சான்று அளித்ததையும், மசூத் அசாரை விடுவித்ததை அரசியல் முடிவு என்று கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த ட்வீட்டில், " மோடி அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாஜக அரசுதான் தீவிரவாதி மசூத் அசாரை வெளியிட்டது என்ற அனைத்து ரகசியங்களையும் வெளியிட்டுவிட்டார். மசூத் அசாரை வெளியிட்டதே அரசியல் முடிவுதான் என்று கடந்த 2010-ம் ஆண்டு பேட்டியில் தெரிவித்துவிட்டார். இப்போது தேச விரோதச் சட்டத்தை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் பயன்படுத்துவார்களா" என்று தெரிவித்து 'தீவிரவாதிகளை விரும்பும் பாஜக' என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், " மோடி அ ரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தீவிரவாதி மசூத் அசாருக்கு நற்சான்று அளித்து கடந்த 2010-ம் ஆண்டு பேட்டி அளித்தார்.
மசூத் அசாருக்கு எப்படி வெடிகுண்டு செய்வது என்று தெரியாது. மசூத் அசாருக்கு துப்பாக்கியால் சுடத் தெரியாது, மசூத் அசாரை விடுவித்த பின், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத் துறை வளர்ச்சி 200 மடங்கு அதிகரித்தது. இப்படியெல்லாம் அஜித் தோவல் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விமானக் கடத்தல் விஷயத்தில் அப்போது காங்கிரஸ் பேச்சுவார்த்தை இல்லை, இரக்கம் காட்டாதீர்கள் என்று வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வீரம் பாஜகவுக்கு ஏன் இல்லை.
இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.