Published : 08 Mar 2019 05:42 PM
Last Updated : 08 Mar 2019 05:42 PM

மிளிரும் நேர்மை: கடைக்காரர் இல்லாமலே லாபத்துடன் இயங்கும் கடை; இதுவரை திருடு போனதில்லை

 

 

கடைக்காரர் இல்லாமலே லாபகரமாக ஒரு கடை கேரளாவில் இயங்கிவருகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மக்கள் உருவாக்கும் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடையில், இதுவரை திருட்டு நடந்ததில்லை.

 

கன்னூரின் ஆழிக்கோடை ஒட்டிய கிராமம் வங்குலத்துவாயல். இங்கு கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து இந்தக் கடை இயங்கிவருகிறது. ஜனசக்தி அறக்கட்டளை என்னும் என்ஜிஓ இந்தக் கடையை நிர்வகித்து வருகிறது.

 

இதுகுறித்துப் பேசுகிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த சுகுணன். ''முதலில் அந்த இடத்தில் கிராமத்து மக்களுக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு தன்னார்வலர்கள் மூலம் வயதானவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் மருந்து வாங்கிக் கொடுக்கும் இடமாகப் பயன்படுத்தினோம். ஒவ்வொருவருக்கும் மருந்து வாங்க சுமார் 1000 ரூபாய் தேவைப்பட்டது. அவர்களில் சிலர் வித்தியாசமான, அழகிய வடிவங்களில் சோப், பவுடர்களை உருவாக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். ஆனால் அவற்றை விற்பனை செய்யத் தோதான இடம் இல்லை.

 

உடனே ஒரு யோசனை உருவானது. எங்களின் இடத்தில் இந்தக் கடையைத் தொடங்கினோம். இந்தக் கிராமத்தில் உள்ள அனைவரையும் எங்களுக்குத் தெரியும். அவர்களைப் பரிபூரணமாக நம்பினோம். கடைக்காரர் ஒருவரை நியமிப்பது குறித்து யோசிக்கவே இல்லை. சதானந்தன் என்னும் காய்கறி வியாபாரி தினந்தோறும் தனது கடையைத் திறக்கும்போது திறந்து, மாலையில் மூடிவிடுவார்.

இப்போது சக்கர நாற்காலியில் இருப்போர் மற்றும் நடக்க முடியாத 5 பேர் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்கிறோம். கல்ஃபில் பணியாற்றி முதுகு ஒடிந்து நாடு திரும்பிய கலீல், பிறந்ததில் இருந்தே நடக்க முடியாமல் இருக்கும் சுபைதா, சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை நகர்த்தும் சுகுமாரன், கால்பந்து விளையாட்டில் காயம் பட்ட வினோத் மற்றும் ஸ்ரேயா இல்லத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆகியோர் பொருட்களை உருவாக்குகின்றனர்.

 

சோப்புகள், சலவை பொடிகள், சட்டை, மெழுகுவர்த்திகள், தேங்காய் ஓடு ஸ்பூன்கள் மற்றும் பேனாக்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறோம்.

 

ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 1000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது சராசரியாக ரூ.750-க்கு வியாபாரம் நடக்கிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை பணத்தை எடுத்துவருவோம். இதுவரை பணம் திருடு போனதில்லை. கணக்கு இடித்ததில்லை. சொல்லப்போனால் 5 ரூபாயோ, 10 ரூபாயோ அதிகமாகத்தான் கிடைத்திருக்கிறது'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் சுகுணன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x