Last Updated : 17 Mar, 2019 11:02 AM

 

Published : 17 Mar 2019 11:02 AM
Last Updated : 17 Mar 2019 11:02 AM

காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்த மஜத; பொதுச்செயலாளர் டானிஷ் அலி மாயாவதி கட்சியில் இணைந்தார்

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டானிஷ் அலி முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். கர்நாடக மாநில கட்சியாக இருக்கும் மஜதவை வட மாநிலங்களில் வளர்க்கும் பணியில் ஈடுபட்டதால் தேவகவுடாவின் நம்பிக்கையை பெற்றார் அலி.

இதனால் மஜதவின் டெல்லி முகாமாக விளங்கிய டானிஷ் அலி கடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத - பகுஜன் சமாஜ் கூட்டணி உருவாக காரணமாக இருந்தார். இதனால் தலித் மற்றும் முஸ்லிம்கள் வாக்குகள் காங்கிரஸில் இருந்து பிரிந்து, மஜத - பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு விழுந்தது.

இதேபோல் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் - மஜத தொகுதி பங்கீட்டில் நீடித்த இழுபறியை முடிவுக்கு கொண்டுவர பாடுபட்டார். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து பேசினார். கடந்த 13-ம் தேதி ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மஜதவுக்கு 8 தொகுதிகள் பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் லக்னோவில் நேற்று டானிஷ் அலி உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் அதன் பொதுச்செயலாளர் சதீஷ் மிஸ்ரா முன்னிலையில் இணைந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு வரை காங்கிரஸ் - மஜத கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டிய இவரது திடீர் விலகலால் காங்கிரஸ் - மஜத தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே கர்நாடக முதல்வர் குமாரசாமி, “டானிஷ் அலி என்னுடனும், தேவகவுடாவுடனும் ஆலோசித்த பிறகே பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளார். இந்த முடிவு மஜத - பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேயான நல்ல அரசியல் ஏற்பாடுதான். இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் மஜத, பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும்''என தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் போட்டி

இதுகுறித்து டானிஷ் அலி கூறுகையில், “தேவகவுடாவின் ஆசியுடன்தான் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளேன். மஜத உத்தரபிரதேசத்தில் வலுவாக இல்லாததால் என்னால் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியவில்லை. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவன் என்பதால் கர்நாடகாவிலும் என்னால் வளர முடியவில்லை. எனவே இங்கு வலுவாக இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்திருக்கிறேன்''என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ள டானிஷ் அலி வருகிற தேர்தலில் மேற்கு உத்தர பிரதேசத்தில் போட்டியிட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x