Last Updated : 08 Mar, 2019 04:02 PM

 

Published : 08 Mar 2019 04:02 PM
Last Updated : 08 Mar 2019 04:02 PM

நீரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு

தொழிலதிபர் நீரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த வகையில் நாடு முழுவதும் அறியப்பட்டவர்தான் நீரவ் மோடி. இந்த மோசடிக்காக தற்போது தேடப்படும் நபராக இருக்கிறார்.

நீரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில அலிபாக் பகுதியில் கடற்கரையை ஒட்டி 33,000 சதுர அடியில் கட்டப்பட்ட அவரது பங்களாவை நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் வெடிவைத்து தகர்த்துள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக இந்த பங்களா தகர்க்கப்பட்டுள்ளது.

இந்த பங்களா மும்பையிலிருந்து 90 கி.மீ. தொலைவில் ராய்கட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிஹிம் கடற்கரைக்கு மிக நெருங்கிய பகுதியில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விதிமுறை மீறல்களுக்காக கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராய்கட் மாவட்ட ஆட்சியர் விஜய் சூர்யவன்ஷி கூறும்போது, "நிரவ் மோடியின் அந்த பங்களா மிகவும் வலிமையாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அதிநவீன இயந்திரங்களை வைத்து கட்டுமானத்தை இடித்தாலும்கூட மாதக்கணக்கில் வேலை செய்யவேண்டியிருக்கும். அதனால் வேலையை துரிதமாக முடிக்கவே இம்ப்ளோசிவ் (Implosive -உள்வெடிப்புமுறையை) பயன்படுத்தி கட்டிடத்தை தகர்த்தோம்.

பங்களாவின் மிக வலுவான கான்க்ரீட் பில்லர்களில் துளையிட்டு வெடிப்பொருள் பொருத்தப்பட்டது. உள்வெடிப்பு முறையில் நிபுணத்துவம் வாய்ந்த குழு இதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. வெற்றிகரமாக இந்தபங்களா தகர்க்கப்பட்டது" என்றார்.

ராய்கட் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதை எதிர்த்து சம்புராஜே யுவ கிராந்தி என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த பங்களா இடிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x