Last Updated : 17 Mar, 2019 06:19 PM

 

Published : 17 Mar 2019 06:19 PM
Last Updated : 17 Mar 2019 06:19 PM

பிஹாரில் பாஜக, நிதிஷ் குமார் கட்சி தலா 17 இடங்களில் போட்டி: என்டிஏ தொகுதிகள் அறிவிப்பு

பிஹார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில்  பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் 40 இடங்களுக்கான தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 17 தொகுதிகளிலும், மீதமுள்ள 6 தொகுதிகளில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி போட்டியிடுகின்றன.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக  நடக்கிறது, மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மூன்று கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப்பங்கீடு இன்று முடிந்தது. பிஹார் மாநிலத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது.

பிஹாரில் உள்ள 40 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 11-ம்தேதி 4 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 5 தொகுதிகளுக்கும், 23-ம் தேதி 5 தொகுதிகளுக்கும், 29-ம் தேதி 5 தொகுதிகளுக்கும், மே 6-ம் தேதி 5 தொகுதிகளுக்கும், மே 12-ம் தேதி 8 தொகுதிகளுக்கும், 19-ம் தேதி 8 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது.  

இதில் பாஜக 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த கட்சி, பாச்சிம், சம்பரன், புர்வி சம்பரன், முசாபர்பூர், சரன், மகாராஜ்கஞ்ச், சியோகர், மதுபானி, தார்பங்கா, உஜார்பூர், பெகுசாரை, பாட்னா சாஹிப், பாடலிபுத்ரா, அரா, பக்ஸர், சசாராரம், அவுரங்காபாத், அராரியா ஆகிய தொகுதிகளி்ல் போட்டியிடுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி வால்மீகிநகர், சிவான், கோபால்கஞ்ச், ஜெகன்பாத், கயா, கராகத், மதேபுரா, சுபால், ஜான்ஜ்ஹார்புர், சீதாமார்கி, புர்னியா, கிஷ்ஹான்கஞ்ச், பங்கா, பாஹல்புர், நாளந்தா, முங்கர், கத்திஹர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

லோக் ஜன சக்தி கட்சி, ஹஜிபுர், சம்ஸ்திபுர், ஜமி, நவாடா, ககாரியா, வைஷாலி ஆகிய தொகுதிகளி்ல போட்டியிடுகிறது.

அதேசமயம், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆர்எல்எஸ்பி, எச்ஏஎம்(எஸ்), சரத்யாதவின் லோக்தந்ரிக் ஜனதா தளம், நடிகர் முகேஷ் ஷானியின் விகாஷில் இன்சான் கட்சி ஆகியவை இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கட்சிகள் நாளை தாங்கள் போட்டியிடும் தொகுதிகள்குறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. பிஹாரில் மொத்தம் 7.06 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள், 72 ஆயிரத்து 723 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x