Last Updated : 14 Mar, 2019 11:38 AM

 

Published : 14 Mar 2019 11:38 AM
Last Updated : 14 Mar 2019 11:38 AM

பலவீனமான மோடி, சீன அதிபரை கண்டு அஞ்சுகிறார்: மசூத் அசார் விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனா தடை செய்தது குறித்து பிரதமர் மோடி வாய்திறந்து கருத்து கூற மறுக்கிறார், பலவீனமான பிரதமர், சீன பிரதமரை கண்டு அஞ்சுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில்தான் பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்களை இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ம் தேதி குண்டுவீசி அழித்ததாகக் கூறப்பட்டது.

இந்த சூழலில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தால், தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், இன்று அதிகாலை 12.30 மணி கடைசிநேரமாகும். ஆனால்,அதுவரை எந்த உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் கெடுநேரம் முடியும் தருவாயில், சீனா தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை முன்வைத்து தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கச் சீனா தடுப்பது இது 4-வது முறையாகும்.

இந்த சம்பவத்தில் சீனா குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி இருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ட்விட்டரில் ராகுல் காந்தி கூறுகையில், " பலவீனமான மோடி, சீனப் அதிபரை ஜி ஜிங்பிங்கைக் கண்டு அஞ்சுகிறார். மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு எதிராகச் சீனா நடந்து கொள்கிறது, இது குறித்து மோடி தனது வாயிலிருந்து ஒருவார்த்தை கூட பேச மறுக்கிறார். நரேந்திர மோடியின் சீன ராஜதந்திரம், குஜராத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் ஊஞ்சலாடினார் மோடி,  டெல்லியில் ஜிங்பிங்கை கட்டி அணைத்தார் மோடி, சீனாவிடம் பணிந்துவிட்டார் மோடி" என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் " மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சியை சீனா தடுத்துவிட்டது குறித்து ஒவ்வொரு இந்தியர் மனதிலும் எழுகிறது. அப்படியென்றால், சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன், பிரதமர் மோடி ஊஞ்சலாடியதில் என்ன பயன் இருக்கிறது. கொடுரமான, ரத்தத்தை உறையவைக்கும் கொலைகளை நிகழ்த்திய தீவிரவாதி மீண்டும் பாஜகவால் தப்பி இருக்கிறார் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா ட்விட்டரில் கூறுகையில், " தீவிரவாதத்துக்கு எதிராக உலகமே போராடிவரும் நிலையில், இன்று நடந்த சம்பவம் நமக்கு வேதனையானதாகும். மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அங்கீகரிக்கச் சீனா தடை செய்தது, தீவிரவாதத்தின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானுடன் அந்த நாட்டை பிரிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது " எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x