

குழப்பங்கள், சமாதானங்கள் ஆகியவற்றுக்குப் பின் இன்று அதிகாலை 2 மணிக்கு கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.
கோவா சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் பதவியேற்கும் முன் தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வராகியுள்ளார்.
முதல்வர் பிரமோத் சாவந்துடன் சேர்ந்து, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் என்ற ராமகிருஷ்ண தாவில்கர், கோவா பார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்.
மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்தபோது துணை முதல்வர்கள் பதவி இல்லை. ஆனால், முதல்வர் பதவிக்கான பேரம் நடந்ததையடுத்து, துணை முதல்வர் பதவி இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரு கட்சிகளின் ஆதரவுடன்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. மனோகர் பாரிக்கர் இறந்தவுடன் இரு கட்சிகளைச் சேர்ந்த தாவில்கர், சர்தேசாய் முதல்வர் பதவி கேட்டு முரண்டு செய்தார்கள். இவர்களை சமாதானப்படுத்தி, இருவரையும் துணை முதல்வர்களாக நியமித்துள்ளது பாஜக.
இரவு 11 மணிக்கு தொடங்குவதாக இருந்த பதவியேற்பு விழா பல்வேறு தாமதங்கள், கடைசிநேரப் பேச்சுகள் ஆகியவற்றால் 2 மணிக்கு நடந்தது. மனோகர் பாரிக்கர் அமைச்சரவையில் இருந்த அத்துனை பேரும் மீண்டும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கோவா மாநிலத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜக, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்டு கட்சி, 3 சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவில் ஆட்சி நடந்தது. ஆனால், மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து யார் முதல்வர் என்று கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டதால், மாநில அரசியலில் குழப்பமான சூழல் நிலவியது.
இதையடுத்து, நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து வந்த மூத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கூட்டணிக் கட்சிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோமந்தக் கட்சியும், கோவா பார்வேர்டு கட்சியும் முதல்வர் பதவியைக் கோரின. இதனியைடேய நீண்ட பேச்சுக்குப் பின், இரு கட்சியின் தலைவர்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி இன்று அதிகாலை 2 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் மிருதுளா சென் முதல்வர் பிரமோத் சாவந்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, பாஜகவின் 11 எம்எல்ஏக்கள், தலா 3 எம்எல்ஏக்கள் கொண்ட ஜிஎப்பி, எம்ஜிபி, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
துணை சபாநாயகராக இருந்த பாஜகவின் மைக்கேல் லோபோ, மக்களவைத் தேர்தல் முடியும்வரை சபாநாயகராக இருப்பார். அதன்பின் தேர்தல் நடத்தப்பட்டு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.
இதற்கிடையே மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக 14 எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஆளுநர் மிருதுளா சென்னைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி மனு அளித்தது. ஆனால், கடைசிவரை காங்கிரஸ் கட்சியை ஆளுநர் அழைக்கவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கூறுகையில், "முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைந்தது வேதனைதான். ஆனால், அவரின் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு முன் புதிய அரசு பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் மாநிலத்தில் தனிப்பெரும் கட்சி என்று ஆளுநருக்குத் தெரிந்திருந்தும், அவர் எங்களை அழைக்கவில்லை. குதிரைபேரத்துக்கு அனுமதித்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.