

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து, கடந்த சில நாட்களில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேச பாஜகவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் திடீரென விலகியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் பாஜகவில் இருந்து கூட்டம் கூட்டமாக நிர்வாகிகள் விலகியுள்ளது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. விலகியவர்கள் அனைவரும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.
வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிக்கம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், மக்களவைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் 60 இடங்களில் 54 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
இந்தத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்ட பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் மட்டும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் பொதுச்செயலாலர் ஜர்பும் காம்பின், உள்துறை அமைச்சர் வெய், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் காம்லின், 6 எம்எல்ஏக்கள் ஆகியோர் விலகியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து விலகி, கான்ராட் சங்மாவின், தேசிய மக்கள் கட்சியில்(என்பிபி) சேர்ந்துவிட்டனர்.
அருணாச்சலப் பிரதேச பாஜகவைச் சேர்ந்த வெய், ஜர்கர், ஜர்பும் ஆகியோரைத் தவிர்த்து பாஜக எம்எல்ஏக்கள் தாங்வாங் வாங்கம், தபுக் தகு, பனி தரம், பாங்கா பாகே, வாங்லிங் லோவன்டாங், கார்டோ யெக்கியோர், முன்னாள் அமைச்சர் செரிங் ஜுர்னே ஆகியோர் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.
தேசிய மக்கள் கட்சியின்(என்பிபி) தலைவர் தாமஸ் சங்மா கூறுகையில், "எங்கள் கட்சி மாநிலத்தில் 40 இடங்கள் வரை வேட்பாளர்களை சட்டப்பேரவை தேர்தலில் நிறுத்தும். அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றால் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்" எனத் தெரிவித்தார்.
தற்போது மேகாலயாவில் பாஜகவுடன் இணைந்து தேசிய மக்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இப்போது அருணாச்சலப் பிரேதேசத்தில் பாஜகவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அங்கு பாஜகவுடன் சேராமல் தனித்து நிற்கும் முடிவை என்பிபி கட்சி எடுத்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச உள்துறை அமைச்சரும், பாஜகவில் இருந்து விலகியவருமான குமார் வெய் கூறுகையில், " வாரிசு அரசியலைப் புகுத்துகிறது பாஜக. பாஜக சரியாக இருந்தால் நான் விலகியிருக்க வேண்டியது இல்லை. நாடுதான் முதலில் முக்கியம். அதன்பின் கட்சி, தனிமனிதர்கள் என்று பாஜக தலைமை சொல்கிறது. ஆனால் நிதர்சனத்தில் பார்த்தால், அதற்கு எதிராக நடக்கிறது பாஜக. காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்கிறது என்று பாஜக விமர்சிக்கிறது. ஆனால், மாநிலத்தில் முதல்வரின் குடும்பத்தில் 3 உறுப்பினர்களுக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது " எனத் தெரிவித்தார்
காம்லின் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை கட்சியா அல்லது என்னுடைய மக்களா என்ற கேள்வி எழும்போது, தேர்தல் அரசியலில் கட்சியைக் காட்டிலும் மக்கள்தான் முக்கியமானவர்கள். ஆதலால், நான் எனது ஆதரவாளர்களுடன் செல்கிறேன்" எனத் தெரிவித்தார்.
ஒருநேரத்தில் வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சி கோலோச்சிய நிலையில், கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்து, காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியது. இப்போது, பாஜகவுக்குள் குழப்பம் ஏற்பட்டு, தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி இருப்பது பெரும் பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.