‘‘வெறும் நில உரிமை அல்ல; உணர்வுபூர்வமானது’’ - அயோத்தி வழக்கு குறித்து நீதிபதிகள் கருத்து

‘‘வெறும் நில உரிமை அல்ல; உணர்வுபூர்வமானது’’ - அயோத்தி வழக்கு குறித்து நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

ராமஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரம் வெறும் நில உரிமை தொடர்பானது அல்ல, உணர்வு சம்பந்தப்பட்டது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் பொருட்டு இன்று உத்தரவு பிறப்பிக்க இருந்தநிலையில் அதனை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி பாப்டே கூறியதாவது:

எங்களுக்கு வரலாறு பற்றி சொல்ல வேண்டாம். எங்களுக்கும் வரலாறு தெரியும். படையெடுத்து யார் வந்தார்கள், அப்போது அரசராக இருந்த பாபர் என்ன செய்தார். அப்போது கோயில் இருந்ததா அல்ல மசூதி இருந்ததா என்பதை பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை. அதுபற்றி முடிவு எதுவும் எடுக்கவில்லை. அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு கிடைக்குமா என்பதே எங்கள் எண்ணம்.

நாங்கள் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண முடியாதா என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் நீங்கள் அதை ஏற்க மறுக்கிறீர்கள். மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு கிடைக்க ஒரு சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் கூட ஏன் அதை செய்யக்கூடாது. நல்ல முடிவு கிடைத்தால் வழக்கில் தீர்வு எட்டப்டுமே. அந்த வாய்ப்பை ஏன் நழுவவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in