வீடு, கோயில்களில் யானைகள் வளர்க்க தடை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வீடு, கோயில்களில் யானைகள் வளர்க்க தடை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

தமிழகத்தில் வீடு, கோயில்களில் யானைகள் வளர்க்க தடை விதித்து, கோயில், வீடுகளில் உள்ள யானைகளை மீட்டு முதுமலை யானைகள் சரணாலயத்தில் விட, உத்தரவிடக் கோரிய மனு வுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

‘வனப்பகுதியில் வாழும் யானை கள் உணவு தேடி இரவு பகலாக 18 மணி நேரம் வனத்தில் சுற்றுகின்றன. யானைகள் இயற்கை சூழலில் வனத்தில் இருக்கும்போது அதிக நாள் வாழ்கின்றன. அதே நேரத்தில் கோயில்கள், மிருகக்காட்சி சாலை களில் வாழும் யானைகள் குறுகிய காலத்தில் இறக்கின்றன. வீடு, கோயில்களில் யானைகளை கட்டியே வைத்துள்ளனர். பொது வாக யானைகள் அதன் குட்டிகளுக்கு 10 வயது வரை பால் கொடுக்கும். யானைகளை அதன் குட்டிகளிடம் இருந்து பிரித்து கோயில்களுக்கு கொண்டுச் செல் கின்றனர். பின்னர் பயிற்சி என்ற பெயரில் யானைகளை துன்புறுத்து கின்றனர்.

சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவன புள்ளிவிவரத்தில், ஆசிய யானைகள் அழியும் நிலை யில் உள்ளன எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் யானை கள் தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திலும் யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் அடிப் படையில் யானைகளை பாதுகாக்க ஜூலை 14-ல் அதிகாரிகளிடம் மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, கோயில்கள், வீடுகளில் வளர்க்கப்படும் யானைகளின் நிலை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்ய நிபுணர் குழு அமைக்கவும், கோயில்கள், வீடு களில் யானைகள் வளர்க்க புதிதாக உரிமம் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

என அந்த மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க தமிழக உள்துறை செயலர், வனத் துறை முதன்மை செயலர், அறநிலை யத்துறை செயலர் மற்றும் ஆணையர், பிராணிகள் வதை தடுப்பு சங்கம், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர், மதுரை மாவட்ட வன அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in