

மோடி ஆதரவாளர்களை 'முட்டாள்' என்று ட்விட்டரில் விமர்சித்ததால் காங்கிரஸ், பாஜக ஆதரவு நெட்டிசன்கள் இடையே ட்விட்டரில் வார்த்தைப்போர் நடந்து வருகிறது.
மோடியை விமர்சிப்பதும், அந்த விமர்சனத்தால் சர்ச்சையில் சிக்குவதும் பின் கட்சி மேலிடத்தால் கண்டிக்கப்படுவதும் மீண்டும் இதே சம்பவங்கள் சுழற்சியில் நடைபெறுவதுமாக இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா.
இந்த முறையும் அப்படி ஒரு ட்வீட்டை அவர் பதிவிட்டிருக்கிறார். பிரதமர் மோடியின் புகைப்படத்தின் மீது "உங்களுக்குத் தெரியுமா? மோடியின் ஆதரவாளர்களில் மூவரில் ஒருவர் முட்டாள்கள்.. மற்ற இருவரைப் போலவே" என எழுதி பதிவிட்டதோடு இவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்! மகிழ்ச்சிகரமானது அல்லவா? என அந்தப் படத்திற்கு தலைப்பிட்டிருக்கிறார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 32% வாக்குகள் கிடைத்தன. மோடி அலைக்கு விழுந்த வாக்குகள் அவை. இந்நிலையில், திவ்யாவின் ட்வீட்டரி ஆதரித்ததன் மூலம் காங்கிரஸ் அந்த 32% பேரையும் முட்டாள் என அழைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திவ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே வார்த்தைகளை எடுத்து மோடியின் பெயருக்கும் புகைப்படத்துக்கும் பதிலாக ராகுலை பயன்படுத்தி பலரும் ட்வீட் செய்திருக்கின்றனர்.
அதில் ஒருவர் "உங்களுக்குத் தெரியுமா ராகுலின் விசிறிகள் மூவரில் மூன்று பேரும் அவரைப்போலவே முட்டாள்கள்" என திவ்யாவுக்கு மிகக் காட்டமாக பதிலளித்திருக்கிறார்.
இந்த வார்த்தைப்போர் நீண்டு கொண்டே செல்கிறது. பிரதமர் மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முவைப்பது திவ்யாவுக்கு முதன்முறையல்ல. கடந்த செப்டம்பர் மாதம் பிரதமரை 'திருடன்' என்று விமர்சித்ததற்காக அவர் மீது தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.