

தீவிரவாதி மசூத் அசார் விடுதலைக்கு சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டில் இந்திய பயணிகள் விமானத்தை தீவிர வாதிகள் கடத்தினர். பயணிகளை மீட்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய், காஷ்மீர் சிறையில் இருந்த தீவிரவாதி மசூத் அசார் உட் பட 3 பேரை விடுதலை செய்தார்.
அதன்பிறகு பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை தொடங்கினார். நாடாளுமன்ற தாக்குதல், பதான்கோட் விமானப்படைத் தள தாக்குதல், உரி ராணுவ முகாம் தாக்குதல், அண்மையில் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் பல்வேறு நாசவேலைகளை ஜெய்ஷ் இ முகமது நிகழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறும்போது, மசூத் அசாரை விடுதலை செய்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் தவறு என்று குற்றம் சாட்டினர்.
இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். ஜம்மு நேற்று அவர் கூறியதாவது:
கடந்த 1999 விமான கடத்தலின் போது பயணிகளை மீட்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார். அன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தான் அவர் முதலில் ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சி தலைவர் களின் ஒப்புதலின்பேரிலேயே மசூத் அசார் விடுதலை செய்யப் பட்டார். எனவே அவரது விடு தலைக்கு சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வரலாற்றின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே படிக்கும் நோய் உள்ளது. தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு வரலாற்றை நினைவுகூரும் ஆற்றல் இல்லை.
காஷ்மீர் விவகாரத்தில் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மிகப் பெரிய தவறுகளை செய்துள்ளனர். அதனால்தான் காஷ்மீர் பிரச்சினை இன்றளவும் நீடிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.