

நாய்கள் நன்றியுள்ளவை என்று எல்லோரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். உரிமையாளர்களைக் காப்பாற்றத் தனது உயிரை விட்ட நாய்களும் உண்டு. அதற்கு மற்றுமொரு உதாரணமாக மாறியிருக்கிறது டைசன்.
ஒடிசாவின் புவனேஸ்வர் பகுதியில் ஆரிஃப் அமன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவர் டைசன் என்ற நாயை வளர்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்னதாக நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் டைசன் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. குடும்பத்தினர் வெளியே வந்துபார்த்த போது, டைசன் நாகபாம்பு ஒன்றுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
வீட்டுக்குள் நுழைய முயன்ற நாகத்தைத் தடுத்த டைசன், அதனுடன் தொடர்ந்து போரிட்டது. முடிவில் நாகத்தைக் கொன்றது டைசன். ஆனால் பாம்பின் விஷப்பற்கள் டைசனின் மேல் பதிந்ததால், உடம்பில் விஷம் பரவியது.
இதைப் பார்த்த ஆரிஃப், உடனடியாக கால்நடை மருத்துவரை சுமார் 2.20 மணிக்கு அழைத்தார். ஆனால் மருத்துவர்கள் யாரும் அந்த நேரத்தில் இல்லாததால், அங்கு வரவில்லை.
இதனால் சிறிது நேரத்தில் டைசன் உயிரிழந்தது. உரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்ற உயிரையே விட்ட நாய் டைசனின் வீர தீரச் செயலை உள்ளூர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே, ஒரிசா விவசாய மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் மற்றும் பராமரிப்பு கல்லூரியில் மருத்துவர்கள் 24 மணிநேரமும் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.