செவ்வாய்கிரக சுற்றுப்பாதையில் இணைந்தது மங்கள்யான்: விண்வெளித்துறையில் இந்தியா வரலாற்றுச் சாதனை

செவ்வாய்கிரக சுற்றுப்பாதையில் இணைந்தது மங்கள்யான்: விண்வெளித்துறையில் இந்தியா வரலாற்றுச் சாதனை
Updated on
2 min read

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் புதன்கிழமை காலை 7.41 மணிக்கு வெற்றிகரகமாக நிலைநிறுத்தப்பட்டது.அதில் உள்ள‌ 8 இயந்திரங்களையும் இயக்கி சுற்றுவட்ட பாதையில் இணைந்ததற்கான சமிக்ஞை காலை 8 மணிக்கு உறுதிப்படுத் தப்பட்ட‌து.

இதன்மூலம் உலகில் முதல் முயற்சியிலே செவ்வாய் கிரகத் தின் சுற்றுவட்டப் பாதையில் ஆய்வுக் கலத்தை நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் வரலாற்று சாதனை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பெங்களூரில் பிரதமர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

சூரிய குடும்பத்தின் சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறு பற்றி ஆராய மங்கள்யான் விண்கலம், கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பிற்பகல் 2.38 மணிக்கு ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது.

65 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள செவ்வாய்கிரகத்தை நோக்கி 325 நாட்கள் பயணத்தை தொடங்கிய மங்கள்யான் கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பூமியின் முதல் சுற்றுவட்ட பாதையில் இணைந்தது. மறுநாள் அதன் வேகம் அதிகரிக்கப்பட்டு, 12,000 கி.மீ தூரம் சென்று 2-வது சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. அதற்கடுத்த இரு வாரங்களில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவ‌து சுற்று வட்ட பாதைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி புவி ஈர்ப்பு விசை பகுதியில் இருந்து விலகி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய‌ நேரடி பயணத்தை மங்கள்யான் தொடங்கியது.

நொடிக்கு 22.5 கி.மீ வேகத்தில் பயணித்த மங்கள்யான் விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி மொத்த பயண தூரத்தில் 33 கோடி கி.மீ. (50 சதவீதம்) கடந்தது. கடந்த 22-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு மண்டலத்துக்குள் நுழைந்ததும்,மங்கள்யானின் மிக முக்கிய சோதனை முயற்சி பரிசோதிக்கப்பட்டது.300 நாட் களாக இயங்காமல் இருந்த லேம் இயந்திரம் முதல் முறை யாக சுமார் 4 நொடிகள் இயக்கப்பட்டது.

திக்.. திக்.. பயணம்

இந்நிலையில் நேற்று அதிகாலை 4.20 மணி அளவில் மங்கள்யானை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் செலுத்தும் பணிகள் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து மங்கள்யானின் வேகத்தை குறைக்கும் 440 நியூட்டன் திரவ இயந்தி‌ரம் காலை 7.41 மணிக்கு செயல்படுத்தப்பட்டது.வெற்றிகரமாக செயல்பட்ட திரவ இயந்திரம் நொடிக்கு 22.5 கி.மீ. என்ற அளவில் இருந்த மங்கள் யானின் வேகத்தை நொடிக்கு 2 கி. மீட்டராக குறைத்தது.

காலை 7.49 மணி அளவில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் இணைந் ததற்காக சமிக்ஞை காலை 8 மணி அளவில் கிடைத்தது. இதையடுத்து மங்கள்யானில் இருக்கும் 8 இயந்திரங்களும் வெற்றிகரமாக இயங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானி களும்,பல்வேறு தலைவர்களும் உற்சாகத்தில் கைதட்டியும், கட்டி அணைத்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பார்வையிட்ட பிரதமர்

பெங்களூரை அடுத்துள்ள பீனியா இஸ்ரோ தரைக்கட்டுப் பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் மோடி இந்நிகழ்வை நேரடியாக பார்வையிட்டார். மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in