Published : 17 Mar 2019 07:57 PM
Last Updated : 17 Mar 2019 07:57 PM

காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்ப இங்கிலாந்து, அரபு, ஆப்பிரிக்க நாடுகளில் நிதி திரட்டிய மசூத் அசார்: டெல்லியில் போலி பாஸ்போர்ட்டில் தங்கினார்

காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்பவும், தீவிரவாதிகளுக்காக நிதி திரட்டவும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் இங்கிலாந்து, ஆப்பிரிக்க, அரபு நாடுகளுக்கு ஒருமாத பயணம் மேற்கொண்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இங்கிலாந்தில் இருந்து மிகக்குறைவாக, ரூ.15 லட்சம்(பாக் ரூபாயில்) மட்டுமே கிடைத்தது. அதன்பின் கடந்த 1994-ம் ஆண்டு இந்தியாவில் டெல்லியில் போலி பாஸ்போர்ட் மூலம் மசூத் அசார் தங்கியுள்ளார்.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனரான மசூத் அசார், இந்தியாவில் 2001 நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை நடத்தியவர். கடந்த 1986-ம் ஆண்டு தனது இயற்பெயரில், முகவரியில்  பாகிஸ்தானில் பாஸ்போர்ட்டை மசூத் அசார் பெற்றுள்ளார்

காஷ்மீரில் தீவிரவாதத்தைப் பரப்பவும், தீவிரவாதிகளுக்கு உதவும், காஷ்மீர் விஷயத்தை பெரிதாக்கவும் அரபு, ஆப்பிரிக்க, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒருமாதத்துக்கு மேலாக பயணித்து மசூத் அசார் கடந்த 1994-ல் பயணம் மேற்கொண்டார். ஆனால், அப்போது அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், காஷ்மீர் விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால், நிதியுதவியும் குறைவாகக் கிடைத்துள்ளது.

கடந்த 1994-ம் ஆண்டு மசூத் அசார் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட  பின் அவரிடம் விசாரனை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவை இப்போது வெளியாகியுள்ளது.

அதில், கடந்த 1992-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு மசூத் அசார் பயணித்துள்ளார். லண்டனில் உள்ள சவுத்ஹால் பகுதியில் இருக்கும் ஒரு மசூதியில் உள்ள மதபோதகர் முப்தி இஸ்மாயில் என்பவர் மசூத் அசார் லண்டன் வர உதவியுள்ளார்.

முப்தி இஸ்மாயிலுடன் ஒருமாதம் இங்கிலாந்தில் தங்கி இருந்த மசூத் அசார், பர்மிங்ஹம், நாட்டிங்ஹம், பர்லே ஷெப்பீல்ட், டட்ஸ்பரி, லீசெஸ்டர் ஆகிய நகரங்களில் இருக்கும் மசூதிகளுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களிடம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவ ரூ.15 லட்சம் பாகிஸ்தான் கரன்சியில் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் தலைவர்களான மவுலானா இஸ்மாயில் உள்ளிட்டபலரை மசூத் அசார் சந்தித்துள்ளார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இஸ்மாயில் மங்கோலியா, அல்பேனியாவில் மசூதிகளையும், மதரஸாக்களையும் கட்டிக்கொடுத்துள்ளார்.

அதன்பின் சவுதி அரேபியா, அபுதாபி, ஷார்ஜா, கென்யா, ஜாம்பியா ஆகிய நாடுகளுக்கு பயணித்து ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எடுத்துரைத்து நிதியுதவியை மசூத் அசார் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் அபுதாபியில் அசாருக்கு ரூ.3 லட்சமும், ஷார்ஜாவில் ரூ.3 லட்சமும், சவுதி அரேபியாவில் ரூ.2 லட்சமும் பாகிஸ்தானிய பணத்தில் கிடைத்துள்ளது. அதன்பின் 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லிக்கு போர்ச்சுக்கீசிய போலி விசா மூலம் இந்தியாவுக்கு மசூத் அசார் வந்துள்ளார்.

டெல்லியில் உள்ள சாணக்கியபுரி பகுதியில் இருக்கும் தி அசோக் ஹோட்டலில் தங்கியுள்ளார். விமான நிலையத்தில் மசூத் அசாரை விசாரணை செய்த அதிகாரிகளிடம் தான் போர்ச்சீகியர் என்றும் பூர்வீகம் குஜராத் மாநிலம் என்று கூறி தப்பியுள்ளார்.

டெல்லியில் இரு நாட்கள் தங்கியுள்ள மசூத் அசார், தரூல் உலூம், தியோபந்த், கன்கோ, ஷஹரான்பூர் ஆகிய நகரங்களுக்குச் சென்றுள்ளார்.  அதன்பின், டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு சென்று அங்கு பல்வேறு நபர்களைச் சந்தித்துள்ளார மசூத் அசார். அப்போது பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் 1999-ம் ஆண்டு காந்தகார் விமானக் கடத்தலின் போது மசூத் அசார் உள்பட 3 தீவிரவாதிகளை மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x