Published : 27 Sep 2014 09:40 AM
Last Updated : 27 Sep 2014 09:40 AM

திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 4-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா தொடக்க நாளான நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து கருடக் கொடியுடன் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமலையப்ப சுவாமிகள் மாடவீதிகளில் உலா வந்தனர்.

பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் சுவாமியின் சேனாதிபதியான விஸ்வகேசவர் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க மாலை 5.36 - 6 மணி இடையே பிரம்மோற்சவ கருடக் கொடி, தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான நேற்று இரவு, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார்.

பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருமாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையின் முன்பு, யானை, குதிரை,காளை போன்ற பரிவட்டங்கள் சென்றன. பின்னர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் கண்ணைக் கவரும் வகையில் இருந்தன.

பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, சனிக்கிழமை காலை 9 மணியளவில் சிறிய சேஷ வாகன சேவையும், இரவு 9 மணியளவில் அன்ன வாகன சேவையும் நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ வரலாறு

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவின் பின்னணியை தெரிந்து கொள்வோம்.

திருவேங்கடவனின் உத்தரவின் பேரில் சுமார் பல கோடி ஆண்டு களுக்கு முன்பு பிரம்மனே முன் னின்று உற்சவம் நடத்தியதாக ஐதீகம். பிரம்மனால் தொடங்கப் பட்டதால் இது, பிரம்மோற்சவம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

கிரேதா யுகத்தில் நரசிம்மராகவும், திரேதா யுகத்தில் ராமராகவும், துவாபரா யுகத்தில்  கிருஷ்ணராகவும் அவதரித்த மகா விஷ்ணு, இந்த கலியுகத்தில் வெங்கடேச பெருமாளாக அவதரித்திருப்பதாக  வெங்கடேஸ்வர மஹத்தயம் எனும் நூல் தெரிவிக்கிறது.

பிரம்மன் தொடங்கிய இந்த பிரம்மோற்சவம், அரசர் காலங்களின் தொடக்கத்தில் ஆண்டுக்கு 12 முறை நடந்துள்ளது. 10-ம் நூற்றாண்டில் பல்லவ ராணி சாம்பவினி, முதன்முறையாக திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ விழா நடத்தியதாக கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து13-ம் நூற்றாண்டில் திருவேங்கடநாத மாதவராய ராயுடு எனும் அரசர் ஆடி மாதங்களில் இவ்விழாவினைக் கொண்டாடி உள்ளார்.

14-ம் நூற்றாண்டில் ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது. 1388-ம் ஆண்டில் விஜய நகர 2-வது ஹரிஹர ராயுடு, வெள்ளி வாகனங்களில் பிரம்மோற்சவ விழாவினை நடத்தி உள்ளார். 1429-ம் ஆண்டு 2-வது தேவராயர் பிரம்மோற்சவ காலங்களில் ஏழுமலையானுக்கு 3கிராமங்களை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

17-ம் நூற்றாண்டில் மட்டும் ஒரே ஆண்டில் ஏழுமலையானுக்கு 7 பிரம்மோற்சவங்கள் நடந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 1739-ம் ஆண்டில் பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் வெகு விமரிசையாக நடந்துள்ளது. இதுபோன்று பிரம்மன் முன்னின்று நடத்திய இந்த பிரம்மோற்சவம், படிப்படியாக அரசர் காலத்திலும் தொடர்ந்து தற்போது தேவஸ்தானம் சார்பிலும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x