

மூச்சுத் திணறல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை மருத்துமனை ஊழியர்களே சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் ஐந்து பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை வட்ட ஆய்வாளர் ஹரிமோகன் தெரிவிக்கையில், ''மூச்சுப் பிரச்சினை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் கும்பல் ஒன்று அப்பெண் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நான்கு ஆண்கள் ஒரு பெண் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் மருத்துவமனை ஊழியர்கள் இச்சம்பவத்தின்போது சிசிடிவி கேமரா இயக்கத்தை நிறுத்திவிட்டது தெரியவந்துள்ளது.
உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் இவர்கள் ஐந்து பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலில் அவர்களுடைய பங்கு என்ன என்பது குறித்து மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது'' என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இதுகுறித்து கூறுகையில், ''மூச்சுப் பிரச்சினைக்காக இம்மருத்துவமனையில் என் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அருகில் யாருமில்லாத நேரத்தில் மருத்துவமனையின் ஊழியர்கள் சிலர் அவருக்கு மயக்க ஊசி போட்டுவிட்டு மூன்று பேர் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் ஊழியர் ஒருவர் உட்பட இன்னொருவரும் உடந்தையாக இருந்தார்'' என்றார்.
மருத்துவமனை ஊழியர்களே கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.