சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைந்ததால் பரிகாரபூஜை நடந்ததா? - தந்திரி விளக்கம்

சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைந்ததால் பரிகாரபூஜை நடந்ததா? - தந்திரி விளக்கம்
Updated on
2 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இரு இளம் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்தியதால், பரிகாரபூஜை நடத்தப்பட்டது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அதற்காக பரிகாரபூஜை நடத்தப்படவில்லை என்று சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜீவரு விளக்கம் அளித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு தீவிரமாக இருந்தபோதும், சபரிமலை கோயிலுக்குள் 10 வயதுமுதல் 50 வயதுப்பெண்கள் அனுமதிக்க பக்தர்கள், இந்து அமைப்புகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கடந்த சபரிமலை மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன் முழுவதும் போராட்டம், குழப்பம் நிலவியது.

இந்த சூழலில் ஜனவரி 2-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த கனக துர்கா, பிந்து ஆகிய இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போலீஸார் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்து திரும்பினர். இந்த இரு பெண்களும் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், இவர்கள் இருவரும் வந்து சென்றபின் கோயில் நடைசாத்தப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டு, பின் திறக்கப்பட்டது.

தலைமைத் தந்திரியின் செயல் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கோயிலுக்குள் சென்ற பிந்து தலித் என்பதால், பரிகார பூஜை நடத்தப்பட்டதாகக் கூறி எஸ்சி,எஸ்டி ஆணையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, கோயிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது குறித்து தலைமைத் தந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸம்போர்டு உத்தரவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வழிபாடு முடிந்தநிலையில், பரிகாரபூஜை நடத்தப்பட்டதற்கான விளக்கத்தை 11 பக்கங்களில் தேவஸம்போர்டிடம் தலைமைத் தந்திரி கண்டடரு ராஜீவரு அளித்துள்ளார்.

அப்போது, தந்திரி கண்டரரூ ராஜீவரிடம் பரிகார பூஜை, கோயிலுக்குள் இரு பெண்கள் நுழைந்ததால் நடத்தப்பட்டதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இரு பெண்கள் நுழைந்து சாமி தரிசனம் செய்ததால், பரிகாரபூஜை நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. சன்னிதானத்தின் புனிதம்காக்கப்படவே பரிகாரபூஜை நடத்தப்பட்டதேத் தவிர பெண்கள் நுழைந்ததால் அல்ல.

மண்டலபூஜை, மகரவிளக்கு பூஜை தொடங்கியதில் இருந்து சபரிமலையில் பல்வேறு சர்ச்சைகள், பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்தது. இதுபோன்ற சூழலில் கோயிலின் புனிதத்தன்மை காக்கப்பட பரிகாரபூஜை நடத்தப்பட வேண்டும் என்பது கூறப்பட்டு இருப்பதால், அதற்காக பரிகாரபூஜை நடந்தது.

மேலும், கடந்த 2018, டிசம்பர் 31-ம் தேதி முதல், ஜனவரி1 2019 வரை கூட்டம் அளவுக்கு அதிகமான அளவில் வந்ததால், எந்தவிதமான பூஜையும் நடத்தவில்லை. அதனால், 2-ம் தேதி பூஜை நடத்தப்பட்டது.

சபரிமலை கோயிலில் இதுபோன்ற பூஜைகள் நடத்துவதற்கு நான் தேவஸம்போர்டிடம் அனுமதி பெற அவசியமில்லை. அந்த நேரத்தில் இதுபோன்ற பூஜைகள் செய்யப் போகிறேன் என்று தகவல் தெரிவித்துவிட்டேன்.

நாங்கள் பரிகாரபூஜை நடத்தியபோது, அனைத்துக்கதவுகளும் மூடப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்தப் பூஜைகள் குறித்து தேவஸம்போர்டு தலைவர் ஏ பத்மகுமார், உறுப்பினர் சங்கர் தாஸ் ஆகியோரிடம் தொலைப்பேசியில் தெரிவித்து அவர்களின் ஒத்துழைப்புடன்தான் இந்தப் பூஜை நடத்தினேன்.

தாழமன் மடமான எங்கள் குடும்பத்துக்கு மட்டும்தான் சபரிமலையில் பூஜைநடத்த உரிமை இருக்கிறது. என்னுடைய பதவி என்பது அரசின் நியமனமும் அல்ல. ஐயப்பனுக்குப் பூஜைகள் செய்வதைத் தலைமுறைகளாக செய்து வருகிறோம்

இவ்வாறு கண்டரரூ ராஜீவரு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in