

பாகிஸ்தானில் புகுந்து இந்திய விமானப்படைகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்று தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்றுபோகவும் அனுமதிக்க மாட்டோம். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய்நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது. உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நமது ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கங்கள். சகோதர இந்தியர்களுக்கும் எனது வணக்கங்கள். உங்களின் பிரதான சேவகன் உங்களுக்குத் தலை வணங்குகிறேன்'' என்று மோடி பேசினார்.