Last Updated : 13 Feb, 2019 12:23 PM

 

Published : 13 Feb 2019 12:23 PM
Last Updated : 13 Feb 2019 12:23 PM

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் வாதம் தோற்கடிப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் தங்களுடைய ஒப்பந்தமே சிறந்தது என்று கூறி வந்த பிரதமர் மோடியின் வாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் செய்யப்பட்ட ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தைத் காட்டிலும் தாங்கள் செய்த ஒப்பந்தத்தில் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளேடு இன்று வெளியிட்ட செய்தியில், " பாதுகாப்பு அமைச்சகத்தின் 7 உயர்அதிகாரிகளைக் கொண்ட இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ள 3 அதிகாரிகள், மோடி அரசு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க டசால்ட் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் டசால்ட் நிறுவனத்துடன் 126 விமானங்கள் வாங்கச் செய்யப்பட்ட ஒப்பந்மே சிறந்தது" என்று கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்தக் கடிதத்தையும் வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "பிரதமர் மோடி தான் செய்துகொண்ட ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு 2 வகையில் ஆதரவாக இருந்து வருகிறார். ஒன்று சிறந்த விலை என்றும் 2-வதாக விரைவாக விமானம் வழங்கப்படும் என்று கூறுகிறார். ஆனால், 'தி இந்து' இன்று வெளியிட்ட செய்தியில் இரு விஷயங்களும் நொறுக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ''திருடன் அகப்பட்டுக்கொண்டார். 36 ரஃபேல் போர் விமானங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூறிய விலையைக் காட்டிலும் 55 சதவீதம் அதிகமானது. யூரோபைட்டர் நிறுவனம் ரஃபேல் விமானத்துக்கு 25 சதவீதம் தள்ளுபடி கொடுத்தும் அதை ஏற்காமல் இழப்பு நடந்துள்ளது, வங்கி உத்தரவாதம் அளித்தல் அல்லது அரசு உத்தரவாதம் அளித்தல் நீக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x