

டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களின் வசமே ஒப்படைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய அவர்: "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்துள்ளது. இத்தருணம், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை அரசு எண்ணெய் நிறுவனங்களின் வசமே ஒப்படைக்க சரியானது. பெட்ரோல் விலையை தற்போது எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்வதுபோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
2013 ஜனவரியில், அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, டீசலுக்கு அளிக்கும் மானியத்தை படிப்படியாகக் குறைக்க திட்டமிட்டது. இதன்படி கடந்த ஓராண்டாக, மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் வீதம் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டது. 20 மாதங்களில் டீசல் விலை 19 முறை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு ரூ.11.81 உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன் தன் திட்டத்திற்கு வரவேற்பு:
பிரதம மந்திரியின் ஜன் தன் திட்டம் சிறப்பானது என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.ஜன் தன் திட்டம் சிறப்பானது, அதன் நோக்கம் திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதில் அவசரம் காட்டுவதாக இருக்கக் கூடாது. மாறாக அனைவரும் பலன் பெறும் வகையில் அமைய வேண்டும் என ராஜன் கூறினார்.
வங்கிப் பணிநியமன முறையில் மாற்றம் தேவை:
பொதுத்துறை வங்கிகள் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என கூறிய அவர் அண்மையில் அம்பலமான சில வங்கிக் கடன் தொடர்பான மோசடிகள் அனைத்துமே கடன் தரும் முன்பாக திட்டத்தை சரியாக பரிசீலனை செய்யாததால் விளைந்ததே என்றார். எனவே, பொதுத்துறை வங்கி நிர்வாக அளவிலான பணியிடங்களை நிரப்பும் முறையில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம். இது தொடர்பாக அரசுடன் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது என அவர் கூறினார்.