Last Updated : 09 Feb, 2019 12:13 PM

 

Published : 09 Feb 2019 12:13 PM
Last Updated : 09 Feb 2019 12:13 PM

மதச்சார்பின்மை வெறும் அடையாளம்; கொள்கையோ சங் பரிவாரம்: காங்கிரஸை சாடும் பினராயி விஜயன்

காங்கிரஸ் கட்சி தன்னை மதச்சார்பற்ற கட்சி என அடையாளப்படுத்திக் கொண்டாலும் கொள்கை அளவில் சங் பரிவார கோட்பாடுகளையே பின்பற்றுகிறது என சாடியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு காரணமாக இந்துக்களின் வாக்குகள் உங்களுக்கு எதிராக திரும்பும் என்று கூறப்படுகிறதே?

இதுதவறான பார்வை. இந்துக்கள் எங்களுக்கு எதிராக அணிதிரளவில்லை. சபரிமலை விவகாரத்தில் பெண்கள் சுவர் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்தபோது அதில் எல்லா தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். அதில் உயர்சாதி தாழ்ந்த சாதி என்ற சாதி பாகுபாடுகூட வரவில்லை. சிலர் அப்படிப்பட்ட தோற்றத்தை உருவாக்க முயன்றபோதும்கூட அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவில் இருந்தது.

மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் யார் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறதோ அந்த கட்சிக்கே வாக்களிப்பர். அப்படிப்பார்த்தால் சிறுபான்மையினர் காங்கிரஸை தேர்ந்தெடுக்கவே வாய்ப்புள்ளது அல்லவா?

சிறுபான்மையினர் மதவாத அமைப்புகளுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். அதனால், பாஜகவை கட்டுப்படுத்தும் சக்தி இடதுசாரிகளுக்குத்தான் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். சில கட்சிகளில் உள்ள ஒருசில சிறுபான்மையினர் நீங்கள் சொல்லும் வாதத்தை முன்வைக்கலாம். ஆனால், அவர்களால் இதே கருத்துடையவர்களை உருவாக்க இயலாது.

மூன்று மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸின் எழுச்சி, கேரள வாக்காளர்களைக் கவரும் வகையில் துபாயில் ராகுல் நடத்திய பிரச்சாரம். இவற்றையெல்லாம் இடதுசாரிகள் எப்படிப் பார்க்கின்றனர்?

ராகுல் காந்தி முதன்முறையாக துபாய் சென்றிருந்ததால் அவருக்கு பெரும் கூட்டம் திரண்டதில் ஆச்சரியம் இல்லை. மேலும், முஸ்லிம் லீக் அமைப்புக்கு அங்கு நல்லதொரு தொடர்பு இருக்கிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. தேர்தல் வரும்போது சிறுபான்மையினர் ஆதரவு நிச்சயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அங்கே சொந்த கட்சிக்கே காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பிரச்சினை கொடுத்து வருகின்றனர். ஆனால், எங்களது நம்பகத்தன்மைக்கு அத்தகைய சிக்கல் ஏதுமில்லை.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாம் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகள் இடதுசாரி கொள்கைகளால் உந்தப்பட்டதே.

அதனால், கேரளாவில் உள்ள சிறுபான்மையினருக்கு நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் அவசியம் என்னவென்பது தெரியும்.

பசுவதை செய்ததாக மூன்று பேர் மீது மத்திய பிரதேச அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவியிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதற்கு முன்னதாக இருந்த பாஜக அரசுகூட பசுவதை செய்தவர்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை. பசு பாதுகாப்பு விவகாரத்தில் பாஜகவுடன் காங்கிரஸ் போட்டாபோட்டி போடுகிறது. பசுவதையை முதலில் அமலுக்கு கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் என்று உரிமை கோருகிறார் திக்விஜய் சிங்.

இப்படி ஆர்எஸ்எஸ் கொள்கையால் காங்கிரஸ் வழிநடந்தால் அது நிச்சயமாக மதவாதத்தையே ஊக்குவிக்கும். கேரளாவில் கூட , சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டு வழியில்தான் நடந்தது. இது காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தோல்வி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான இலக்கே பாஜகவை வெளியேற்றுவது என்பதாக இருக்கிறது. அதனை அடைவதற்காக காங்கிரஸுடன் கைகோக்க வாய்ப்பிருக்கிறதா?

இன்றைய சூழலில், பாஜகவுக்கு மட்டும் இன்னொரு ஐந்தாண்டுகள் கையில் கிடைக்குமேயானால் நாட்டின் ஜனநாயகக் கொள்கை, மதச்சார்பற்ற தன்மை, சுயாட்சி அமைப்புகளின் உரிமைகள் நிர்மூலமாக்கப்படும். நமக்கு இப்போது அறிமுகமான இந்தியா இல்லாமலே போகும்.

இதனை தடுக்க வேண்டுமானால் பாஜக ஆட்சி அமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம். இதில் காங்கிரஸுடன் கைகோப்பதா இல்லையா என்பது இரண்டாம் கட்ட விஷயம்.

உதாரணத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இது பாஜகவுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறது. காங்கிரஸ் உண்மையிலேயே பாஜகவை அப்புறப்படுத்த விரும்பினால் இத்தகைய கூட்டணிகளை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும். மாறாக தனித்து நின்று பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறச் செய்யக்கூடாது.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

- தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x