கலாபவன் மணி நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை: சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

கலாபவன் மணி நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை: சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள நடிகர் கலாபவன் மணி கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது உடலில் மீதைல் ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்ததை அடுத்து போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் எனக் குறிப்பிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கலாபவன் மணி இம்மரணத்திற்கு முன்னர் நண்பர்களுடன் மது அருந்திய சம்பவம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்களிடமிருந்து எந்த உண்மையும் பெறமுடியாத நிலையே ஏற்பட்டது. இதனால் நம்பிக்கை இழந்த கலாபவன் மணியின் மனைவி நிம்மி சிபிஐக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்ற கேரள நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

இந்நிலையில் இவ்வழக்கு எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில் இறந்த கலாபவன் மணியின் நண்பர்கள் ஜாபர் இடுக்கி, சாபுமண் மற்றும் 5 பேர் நேரில் ஆஜரானார்கள்.

அப்போது இவ்வழக்கு தொடர்பக ஆஜரான சிபிஐ அதிகாரிகள், கலாபவன் மணியின் மரணத்தில் மறைந்துள்ள உண்மை என்னவென்பதை அறிய அவரது நண்பர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

சட்ட விதிகளின் வழிகாட்டுதல்களின்படி, சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களின் சம்மதத்துடன் மட்டுமே உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடியும். அவ்வகையில் அவர்களின் சம்மதத்தைப் பெற்று இச்சோதனையை தொடங்கலாம் என மாஜிஸ்ட்ரேட்கள் அனுமதி வழங்கினர்.

மரணத்தின் உண்மையான காரணத்தைத் தேடி கலாபவன் மணியின் குடும்பம் தொடர்ந்து போராடி வருகிறது. அவர்களது பல்வேறு அலைச்சல்களுக்குப் பிறகே இவ்வழக்கு 2018-ல் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

1971-ல் பிறந்த கலாபவன் மணி ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் தனது மிமிக்ரி திறமையினால் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். 45 வயதில் இறக்கும் முன்பு வரை தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in