எல்லையில் ஊடுருவ தயார் நிலையில் 200 தீவிரவாதிகள்: ராணுவம் தகவல்

எல்லையில் ஊடுருவ தயார் நிலையில் 200 தீவிரவாதிகள்: ராணுவம் தகவல்
Updated on
1 min read

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ பயங்கர ஆயுதங்களுடன் 200 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சாஹா தெரிவித்துள்ளார்.

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவம், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வாயிலாக தீவிரவாதிகள் ஊடுருவுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை ராணுவம் அவ்வப்போது முறியடித்து வந்தாலும், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ பயங்கர ஆயுதங்களுடன் 200 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ உயர் அதிகாரி சாஹா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தை பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முடுக்கிவிட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் மேலும் கூறியதாவது: "அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ராணுவ கன்டோன்மென்ட் பகுதிகள் நீரில் மூழ்கினாலும், எல்லைப் பாதுகாப்பில் ராணுவம் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.

எல்லையில் கண்காணிப்பு சற்றும் குறையாத காரணத்தால்தான், அண்மையில் குப்வாரா மாவட்டத்தில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கடந்த 10 நாட்களுக்கு பல முறை தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களது அனைத்து முயற்சியையும் முறியடித்து 5 தீவிரவாதிகளை ராணுவம் கொன்றுள்ளது. கேரன், மச்லி பகுதி வாயிலாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in