Published : 10 Feb 2019 04:13 PM
Last Updated : 10 Feb 2019 04:13 PM

ஜம்மு, ஸ்ரீநகர் விமான நிலையங்களின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க  உள்ளோம்: கிரண் ரிஜிஜூ

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே உள்ளிட்ட  பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையங்களின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் மிக விரைவில் ஒப்படைக்க உள்ளதாக  மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மண்டல பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற, உதவி சப்-இன்ஸ்பெக்டர் 9-வது அணியின் பயிற்சி நிறைவு விழா இன்று அரக்கோணத்தில் நடைபெற்றது.

இதில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.  பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சுழற்கோப்பைகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது:

''இன்றைய தினம் பயிற்சி நிறைவு செய்த 1100 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களில் 105 பேர் பெண் பயிற்சியாளர்கள்.  இவர்கள் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பணியாற்ற உள்ளனர். கடந்த ஆண்டும் இந்தப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் நான் பங்கேற்ற போது 800 பெண் காவலர்கள் பயிற்சியை முடித்துச் சென்றனர். மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் அளிக்கப்படும் பயிற்சியும், அணிவகுப்பின் தரமும் மிகவும் சிறப்பானவை. இம்முறை அந்தப் பயிற்சியில் மேம்பட்ட நிலையை மத்திய தொழில் பாதுகாப்புப் படை எட்டியுள்ளது.

51 வாரங்களாக நடைபெற்ற இந்தப் பயிற்சியின் போது, அதிநவீன ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை கையாள்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய ஆயுத காவல்படைகளில் மிகவும் கடினமான பணிகளை மேற்கொள்வதற்கான தகுதியையும், வலிமையையும் வீரர்கள் பெற்றுள்ளனர்.  அத்துடன் மென்மையான திறன் பயிற்சி, வான் பாதுகாப்பு உள்ளிட்ட திறன் பயிற்சிகளையும் பெற்றுள்ளனர். விமான நிலையங்களில் பணியாற்றுவதற்கு இது போன்ற பயிற்சி மிகவும் அவசியம்.

புதிதாகப் பணியில் சேரும் வீரர் வீராங்கனைகள் பொறுப்புடன் கடமையாற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய சொத்தாக திகழ்வார்கள்.

நாட்டிலுள்ள 61 விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், எஃகு ஆலைகள், கனரக தொழிற்சாலைகள், சுரங்கங்கள், அணுசக்தி நிலையங்கள், விண்வெளி மையங்கள், டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியையும் இந்த வீரர்கள் மேற்கொள்வர்.  தற்போது மொத்தம் 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பாதுகாப்பை, மேற்கொண்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை சுமார் 1,55,000 வீரர்களைக் கொண்ட படையாகத் திகழ்கிறது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் அதன் செயல்பாடுகள் மீது மத்திய அரசு முழு நம்பிக்கை வைத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே உள்ளிட்ட  பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையங்களின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் மிக விரைவில் ஒப்படைக்க  உள்ளோம்.

ராணுவப் படைகள் அல்லது மத்திய மாநில காவல் படைகள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து படைப்பிரிவுகளையும் வலுப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் இந்த  நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அமைதியை நிலைநாட்ட முடியும்''.

இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x