Last Updated : 06 Feb, 2019 03:48 PM

 

Published : 06 Feb 2019 03:48 PM
Last Updated : 06 Feb 2019 03:48 PM

திருமணமாகியும் மனைவியுடன் உள்ள புகைப்படம் மோடியிடம் இல்லையே?- போஸ்டர் சர்ச்சைக்கு காங்கிரஸ் பதிலடி

திருமணம் செய்துகொண்டாலும்கூட மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றுகூட பிரதமர் நரேந்திர மோடியிடம் இல்லையே என போஸ்டர் சர்ச்சைக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

அண்மையில், பிரியங்கா காந்தியை காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமித்த ராகுல் காந்தி அவருக்கு உத்தரப் பிரதேசம் கிழக்கு பகுதி நிர்வாகப் பொறுப்புகளையும் ஒப்படைத்தார்.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பிரியங்கா காந்தி நேரடியாக ராகுல் காந்தியைச் சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா இணைந்திருக்கும் போஸ்டர் வைக்கப்பட்டதை பாஜக சர்ச்சைக்குள்ளாக்கியது.

குடும்ப அரசியல் என்றும் ஊழல்வாதிக்கு போஸ்டரா என்றும் விமர்சனங்களை முன்வைத்தன.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் மித்ரா, காங்கிரஸ் அலுவலகம் முன் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தியின் புகைப்படமும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய ராபர்ட் வதேராவின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் சிங்.

இது தொடர்பாக சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, "திருமணம் நடந்திருந்தாலும்கூட மோடி அவரது மனைவி ஜசோதா பென்னுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் இதுவரை எந்த ஒரு பேனரிலும் இடம்பெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

ஆனால், காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட போஸ்டரில் ராபர்ட் வதேராவும் பிரியங்காவும் தம்பதி சகிதமாக இருக்கிறார்கள். இந்த உறவு நீடித்து நிலைத்திருக்கும் என நான் நம்புகிறேன். அவர்களது பெயர்களை பல்வேறு சர்ச்சைகளிலும் பாஜக தொடர்புபடுத்தி வருகிறது. ஆனால், எதையும் நிரூபிக்க முடியாத சூழலிலேயே பாஜக இருக்கிறது.

இன்று, ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை விசாரிக்கலாம். ஆனால் நாளை பிரதமர் மோடியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளும்" என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த அந்த போஸ்டரை டெல்லி முனிசிபல் கவுன்சில் அப்புறப்படுத்தியது  என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x