

அரசாங்கத்தின் மகத்தான தோல்விகளை மூடிமறைக்கவும் வரவிருக்கும் தேர்தலை மனதில்கொண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து டி.ராஜா பிடிஐக்கு அளித்த பேட்டி:
இது வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட் அல்ல. வறுமையைக் குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இது பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியை மூடிமறைக்கும் பட்ஜெட் ஆகும்.
இந்த இடைக்கால பட்ஜெட் இன்னும் சில மாதங்களே உள்ள பொதுத் தேர்தலை மனதில்கொண்டே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட வருடாந்திர வருமான உதவித் திட்டம் குறித்து விவசாயிகள் பட்டியலைப் பற்றி எந்த தெளிவும் இல்லை. விவசாயிகள், குத்தகைதாரர் மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கும் நிலங்களை உரிமையாக்குவதற்கு இது பயன்படாது. தேர்தல்நெருங்கும்நேரத்தில்7 ரூ.2000 மட்டுமே அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இதுமட்டுமின்றி, தனிநபர் வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 6.5 லட்சம் சேமிப்பவர்களுக்கும் வரை வரிவிலக்கை அறிவித்து மத்திய அரசு ஒரு ''முரணான நிலையை'' எடுத்துள்ளது.
ஒருபுறம், பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு, ஆண்டுக்கு ரூ. 8 இலட்சத்துக்கும் குறைவான வருவாயைக் கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மறுபுறத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பாதிபவர்களுக்கு வரி விலக்கை அளித்துள்ளது.
இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.