பாகிஸ்தான் அத்துமீறலால் எல்லையில் பதற்றம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

பாகிஸ்தான் அத்துமீறலால் எல்லையில் பதற்றம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
Updated on
1 min read

இந்திய எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்த முயன்ற சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  நேற்று  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. இதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி விரிவான விவரங்கள் வெளியாகவில்லை.

காஷ்மீரில் எல்லைக்கட்டுபாட்டு கோட்டருகே பாக் விமானத்தில் அத்துமீறலால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தாக்குதல் தொடர்பாக விவாதப்பதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடனடியாக ஆலோசனையை தொடங்கினர்.  இதையடுத்து தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி நிகழ்ச்சிகளை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு உடனடியாக ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்தார்.

இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் ராணுவ அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in