Last Updated : 01 Feb, 2019 08:50 AM

 

Published : 01 Feb 2019 08:50 AM
Last Updated : 01 Feb 2019 08:50 AM

மாநில பட்ஜெட்டில் கூடுதல் வரிகள் விதிப்பால் கேரளாவில் சினிமா டிக்கெட், மது விலை உயர்கிறது: திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

கேரள அரசு தனது பட்ஜெட்டில் கூடுதல் வரிகளை அறிவித்துள்ளதால், சினிமா டிக்கெட் கட்டணம், பீர், ஒயின் போன்ற மதுபானங்களின் விலை உயர்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடும் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் பெருவெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கேரளாவில் பெரும்பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் நேற்று நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான பட்ஜெட் இது. இதில் ‘வெள்ள செஸ்’ விதிக்கப்பட்டுள்ளது. 5-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள எல்லா பொருட்களுக்கும் 0.25 சதவீத ‘வெள்ள செஸ்’ விதிக்கப்படும். இதில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உட்பட பல பொருட்கள் அடங்கும். அதேபோல் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வரும் பொருட்களின் மீதும் சேவைகளுக்கும் ஒரு சதவீதம் வெள்ள செஸ் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு 2 ஆண்டுகளுக்கு இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.600 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும்’’ என்று அறிவித்தார்.

மேலும், கேரளாவை மறுசீரமைக்க பட்ஜெட்டில் 25 புதிய திட்டங்களையும் அமைச்சர் அறிவித்தார். ‘‘இந்தப் பட்ஜெட், புதிய கேரளாவை உருவாக்குவதற்கானது. இதற்கான திட்டங்களை செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தாமஸ் ஐசக் கூறினார்.

அத்துடன் பீர், ஒயின் போன்ற மதுபானங்களுக்கு 2 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.180 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும். சினிமா டிக்கெட்களுக்கும் 10 சதவீத பொழுதுபோக்கு வரி விதிக்கப்படும் என்று அமைச்சர் தாமஸ் ஐசக் அறிவித்தார். இதனால் சினிமா டிக்கெட் கட்டணங்கள், மதுபானங்களின் விலைகள் உயரும்.

மேலும், மோட்டார் சைக்கிள்கள், கார்கள், தனியார் சேவை வாகனங்களுக்கு ஒரே ஒரு முறை ஒரு சதவீத வரி விதிக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார வாகனங்களுக்கு 25 சதவீத வரி சலுகை அளிக்கப்படும். இந்த சலுகை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

சபரிமலைக்கு ரூ.100 கோடி

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பெண்களை அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி நடந்தபோராட்டங்களால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்தது. இதனால், கோயில் வருவாய் ரூ.100 கோடியாக குறைந்தது. இந்நிலையில், கோயில் வளர்ச்சிப் பணிகளுக்கு கேரள அரசு பட்ஜெட்டில் ரூ.250 கோடி ஒதுக்கும் என்று திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகள் எதிர்ப்பார்த்தனர்.

இந்நிலையில், ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தாமஸ் ஐசக் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x