

காஷ்மீரில் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுகட்ட ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு விட்டது, தீவிரவாதிகளின் இனிமேல் தப்பிக்க முடியாது, அவர்களின் தலைவிதி வீரர்களால் தீர்மானிக்கப்படும் என பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் மாலை துணை ராணுவப் படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துப் பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.
இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இது புதிய இந்தியா என்பதை அண்டை நாடு உணர்ந்து கொள்ள வேண்டும், பொருளாதாரச் சிக்கலால் பிச்சை பாத்திரத்துடன் வரும் பாகிஸ்தானுக்கு எந்த ஒரு நாடும் இனிமேல் உதவி செய்யாது என பிரதமர் மோடி ஆவேசமாகக் கூறினார்.
இந்தநிலையில், மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் மிக மோசமான செயலைச் செய்து விட்டார்கள். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்கள். உங்களின் கோபம் எனக்குத் தெரிகிறது. நாடு முழுவதுமே கடும் சோகத்தால் மக்கள் ஆழ்ந்தள்ளனர். வீரர்களின் தியாகம் வீண் போகாது. தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் எங்கே பதுங்கி இருந்தாலும் இனிமேல் தப்பிக்க முடியாது. ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளோம். தீவிரவாதிகளின் தலைவிதியை இனிமேல் ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள். தீவிரவாதிகள் இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாது''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.