Published : 16 Feb 2019 04:49 PM
Last Updated : 16 Feb 2019 04:49 PM

நெருக்கடியில் இந்துத்துவாவின் 2.0 அவதாரம்

"2025-ல் ராமஜென்ம பூமியில் அயோத்தி கோயில் கட்டப்படும்போது இந்தியாவின் வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கும். அயோத்தி கோயிலை மட்டும் கட்டி முடித்துவிட்டார்கள் என்றால் தேசத்துக்கு அடுத்த 150 ஆண்டுகளுக்குத் தேவையான முதலீடு கிட்டிவிடும்".

சரியாக ஒரு மாதத்திற்கு முன்னதாக, அதாவது ஜனவரி 18-ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளரான பய்யாஜி ஜோஷி நாக்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசியிருந்தார்.

மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் சர்ச்சைக்குரிய கோயிலை கட்டி எழுப்பினால் தேச வளர்ச்சிக்கான முதலீடு கிடைத்துவிடும் என்று பய்யாஜி சொன்னது, இந்துத்துவா கொள்கையில் ஊறிப்போகாதவர்களுக்கு வேண்டுமானால் ஏதோ புதிர் போல் தோன்றியிருக்கலாம்.

ஆனால், இந்துத்துவ ஆதரவாளர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளரின் இந்தப் பார்வை தேச வளர்ச்சி, முன்னேற்றம் குறித்தான அவர்களின் கொள்கையுடன் ராமர் கோயில் எழுப்புதலை தொடர்புபடுத்துதல் ஒருங்கிணைந்தத சிந்தனையாகவே இருக்கக்கூடும்.

மேலும், இந்து அடையாளத்தை இப்படி கூட்டாக தீவிரமாக வலியுறுத்துதல் என்பது இந்தியாவின் சந்தை வளர்ச்சிக்கு இன்றியமையாத முன் நிபந்தனை என்பதை பறைசாற்றுவதே பய்யாஜி பேச்சின் கருத்தாக்கம்.

இந்தப் புள்ளியைத் தான் 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் சந்தை-ஆதரவு-வளர்ச்சி அரசியல் ஆதரவாளர்கள் சுய-தர்மசங்கடத்துடன் தோதாகப் புறந்தள்ளினர். அதாவது இந்துத்துவா என்பது கார்ப்பரேட்டிசம், சந்தை வளர்ச்சியியம், முதலீட்டியம் ஆகியவற்றுடன் விட்டு நீங்கா தொடர்பு கொண்டது என்ற விஷயம் மற்றும்  இந்துத்துவாவையும் பொருளாதாரத்தையும் கலக்கும் விஷயத்தில் உள்ள துருவ முரண்பாட்டினால் ஏற்பட்ட தர்மசங்கடத்தின் விளைவுகளை தடுக்கும் உத்தியுடன்  மோடியின் சந்தை வளர்ச்சி ஆதரவாளர்கள் வசதியாக ‘அப்படியில்லை’ என்றவாறு புறந்தள்ளினர்.

இத்தனைக்கும், 2013-ல் ஒரு பேட்டியில் நரேந்திர மோடியே தனது அடையாளத்தைத் தெளிவாகத் தெரிவித்தார்.

நீங்கள் இந்து தேசியவாதியா? அல்லது தொழில் முறை அரசியல்வாதியா? என்ற கேள்விக்கு இரண்டுக்கும் இடையே எந்தப் பாகுபாடும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான் எனக் கூறியிருந்தார்.

மூன்று முரண்பாடுகள்:

இந்து தேசியவாதமும் பாஜகவின் அரசியலும் ஒன்றுதான் என்பதே ஆண்டாண்டு காலமாக இந்துத்துவாவின் அடிப்பை கூறாக இருந்தாலும்கூட குஜராத்தில் மோடியின் ஆட்சிக் காலத்தின்போதே இந்த சிந்தாந்தம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரபலமானது.

மோடியின் பேட்டிக்குப் பின்னரும்கூட 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி தேச வளர்ச்சிக்கு இந்துத்துவம் என்ற கொள்கையைக் கைவிட்டுவிட்டார் என்று கருதியவர்களும் இருந்தார்கள். ஆனால், அது மோடிக்கு ஒருவகையில் வசதியாக அமைந்தது.

வளர்ச்சிக்கு தடைபோட்ட மூன்று முரண்கள்:

இந்துத்துவா அரசியலின் வளர்ச்சி கடந்த காலகட்டங்களில் மூன்று முரண்களால் தடைபட்டது. முதலாவது வலதுசாரி இந்து பழமைவாதிகளுக்கும் வலதுசாரி சிந்தனை கொண்ட அரசியலமைப்புகளுக்கும் இடையேயான முரண், இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்த ரீதியான இறுக்கமான கட்டமைப்பு கோரும் ஒழுக்கக் கோட்பாடுகளுக்கும் அரசியல் கிளை மூலம் பெருவாரி மக்களிடம் சென்று சேர்தல் என்ற கொள்கைக்கும் இடையேயான முரண், சாதியத்தால் பிரிக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் இந்து வாக்கு வங்கியைத் தொகுத்தெடுக்கும் சிக்கல் என மூன்று முரண்கள் இருக்கின்றன.

2002-ல் மோடி இந்துத்துவா அரசியலில் புகுத்திய புதுமையானது இந்த மூன்று முரண்களிலும் தேவையான அளவு சமரசம் ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தது எனலாம்.

மோடி கொடுத்த புத்தாக்கம், முதலில் குஜராத்தில் பிரதிபலித்தது. பின்னர் 2014-ல் நாட்டின் பிற பகுதிகளிலும் எதிரொலித்து. அது 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியைத் தந்தது. அதுதான் இந்துதுவா 2.0 வெர்ஷன்.

அந்தப் புதிய வடிவ இந்துத்துவாவில் தேச முன்னேற்றமும் மத ரீதியான சமூக வளர்ச்சித் திட்டமும் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டிருந்தன. கட்டுப்பாடுகள் நிறைந்த அமைப்பும் அரசியல் ரீதியாக கட்சிக்கு வலுசேர்த்தலும் சமன்படுத்தப்பட்டன. சாதியக் கட்டமைப்பில் கடைசியிடத்தில் இருப்பவர்கள் இந்து அடையாளத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு சமூக அங்கீகாரமும், அரசியல் பிரதிநிதித்துவமும் பெறப்பட்டனர்.

இப்படியாக மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட அந்தக் காரணிகள் எல்லாம் இப்போது பிரிந்து கிடக்கின்றன. இந்துத்துவா 2.0 இப்போது சிக்கலில் இருக்கிறது.

மோடியைத் தேர்தல் அரசியலின் வெற்றி பிம்பமாக கருதிய வட்டம் இப்போது சுருங்கி வருகிறது. அவரை இன்னமும் அப்படி அடையாளம் காணும் சிலரும் அதனை ஏளனத் தொனியிலேயே செய்கின்றனர்.

மோடி முதலாளித்துவத்தை ஊக்குவித்து வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தவறிவிட்டதாகவே தெரிவிக்கின்றனர்.

மோடியின் நிர்வாகத்திறனை பாராட்டிப் புகழ்ந்தவர்கள் எல்லோரும், தாங்கள் பிடிவாதமாகப் போட்டுக்கொண்ட முகமூடியைக் கழற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

காரணம், பொருளாதாரம் கையாளப்பட்ட விதம், குறிப்பாக பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியை அமல்படுத்திய விதம் ஆகியன அவர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

அவர்கள் மோடியைப் புகழ்ந்தாலும்கூட இனியும் மோடிதான் ஆபத்பாந்தவன் என்று கோஷமிடத் தயாராக இல்லை.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மதச்சார்புடைய வலதுசாரிகள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். ராமர் கோயில் கட்டுவதற்கான காலக்கெடுவாக 2025-ஐ நிர்ணயித்து மோடிக்கு ஆசுவாசப்படுத்த வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். 2019-க்கான தேர்த பிரச்சாரத்துக்கு ஆதரவாக களமிறங்கத் தொடங்கியுள்ளனர்.

என்னதான் இருந்தாலும்கூட இந்து தேசியவாதமும் அரசியல் ஆதாயமும் இணைந்தது சொர்க்கத்தில் முடிவான திருமண பந்தமில்லை என்பதால் அது தற்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

சாதியச் சிக்கல்..

இந்து தலித்துகளையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் இந்துதுவா அரசியலில் ஈர்ப்பதுவே உயர் சாதிகள் மேலும் ஆதிக்கம் செலுத்த வலுசேர்க்கும் என்ற பார்வைதான் இந்துதுவா 2.0 வடிவின் வெற்றி. 

அதனாலேயே பிரதமர் மோடி தன்னை ஒரு பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த தலைவராகவே அடையாளம் காட்டிக் கொண்டார். அம்பேத்கர், ஸ்ரீநாராயண குரு, மாதா அமிர்தானந்தமயி ஆகியோரை தனது அரசியலுக்கு மேற்கோள் காட்டினார்.

இந்து சமூகத்தில் சாதியப் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்தப் புதிய இந்துத்துவா கட்டமைக்கப்பட்டது.

இந்துக்கள் மத்தியில் சமூக ரீதியாக, பொருளாதாரம் ரீதியாக, மொழி ரீதியாக, கலாச்சார ரீதியாக வேற்றுமைகள் பரந்துபட்டு கிடக்கும் சூழலில் அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஒற்றைப் புள்ளியாக கட்டமைக்கப்பட்ட விஷயம் 'இந்துக்களின் பொதுவான எதிரி'.

இங்குதான் பசு பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றது. அது சுலபமான கருவியாக அவர்களுக்குக் கிடைத்தது.

மாட்டிறைச்சி உண்பதை ஆதரித்து பசுக்களை வணங்கும் சமூகத்தை லாலு பிரசாத் யாதவ் அவமதித்துவிட்டதாக பிரச்சாரம் செய்த மோடி லாலுவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கோரினார்.

குஜராத்தில் வெண்மைப் புரட்சி நடக்கிறது. அங்கு பசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. பால் வளம் அதிகரித்துள்ளது. ஆனால், பிஹாரில் பசுவதைக் கூடங்களே அதிகரித்துள்ளன. அங்கு பின்க் புரட்சிதான் நடக்கிறது எனக் கூறி லாலுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

ஆனால் எந்த பசுப் பாதுகாப்பு கொள்கை இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க உதவியதோ அதுவே சில காலத்தில் முறிவையும் ஏற்படுத்தியது. காரணம் பசுப் பாதுகாவலர்கள் தலித்துகளுக்கு எதிராகத் திரும்பினர்.

அந்த பதற்றத்தை தணிக்கவே, நீங்கள் துப்பாக்கியால் சுட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் என்னை சுடுங்கள் தலித்துகளை அல்ல என்று மோடி 2016-ல் ஆவேசமாகப் பேசினார்.

தலித்துகளுக்கு எதிராக பசுப் பாதுகாவலர்கள் கட்டற்ற தாக்குதல்களை அவிழ்த்துவிட்டிருந்த நேரம் அது. அதேபோல் 2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் பசுப் பாதுகாப்புக் கொள்கையால் கால்நடை பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த தருணம் அது.

இவையிரண்டும் பசுப் பாதுகாப்புக் கொள்கை இந்து சமுதாயத்துக்கு எதிராக திரும்ப வழிவகை செய்தது.

இந்துத்துவா 2.0 இப்படியாக தலித்துகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எழுச்சியூட்டும் சொல்லாட்சியை உருவாக்கியிருந்தாலும் இந்துத்துவத்துக்கு இணங்கி செயல்படாமல் சுயாதீனமாக முன்னேற்றப் பாதையில் சென்ற சாதி இயக்கங்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தது.

ஜனவரி 2018-ல் பீமா கோரேகானில் தலித்துகள் ஒருங்கிணைத்த பேரணியை போலீஸ் அடக்குமுறை ஏவி தடுத்ததும் இத்தகைய வெறுப்பு மனப்பான்மையின் எதிரொலியே.

வலதுசாரி இந்துக்களுக்கு எதிராக தாழ்ந்த சாதி அமைப்புகள் முற்போக்கு பேசினால் வெறுப்பை உமிழும் போக்கின் அடையாளமே பீமா கோரேகான் ஒடுக்குதல்.

கடந்த சில ஆண்டுகளில் பின்தங்கிய சாதிகள் முன்னெடுத்த அரசியலில் தனது அடையாளத்தைத் தொலைத்த உயர் சாதியினர் மீண்டும் தங்கள் இடத்தைப் பிடிக்க உதவும் வகையில் பாஜக அரசும் அவர்களுக்குத் துணிச்சலை ஊட்டியது.

அதாவது தலித்துகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திறனற்ற போக்கு தொடங்கி அண்மையில் உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பு வரை மோடி அரசின் கொள்கைகள் ஏற்படுத்திய தாக்கம் இந்துத்துவா 2.0 வடிவைச் சிதைத்திருக்கிறது.

சாதி பாகுபாடின்றி இந்துக்களை ஒருங்கிணைப்பதே அந்தகால ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோட்பாடு. ஆனால், இப்போதைய பெரும்பான்மை இந்து சமூகத்துக்கு இது ஏற்புடையதாக இல்லை. இந்த முரண்கள் தான் 2014-ல் பாஜக சோபித்த மாநிலங்களில்கூட தற்போது சரிவை ஏற்படுத்தின.

பாஜக மீதான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரும்புப் பிடியும் சித்தாந்த புனிதத்தைப் பேணுவதற்கான ஆர்.எஸ்.எஸ்.,ஸின் தேடலும் கட்சிக்கும் அமைப்புக்கும் இடையேயான உராய்வுக்கு வித்திட்டுள்ளது. 

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த உராய்வுதான் தேர்தல் அரங்கில் இந்துத்துவா கொள்கைக்கு தோல்வியைப் பெற்றுத் தந்தது என்பது தெரியும்.

ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே அடல் பிஹாரி வாஜ்பாயியை முழுமையாக நம்பியதில்லை. அவர் நேரு சிந்தனைவாதி என்றே குற்றம் சாட்டப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கடுமையாகப் பின்பற்றி பாஜக தலைவர்கள் வெகுஜன அரசியலில் பிரபலமாகவில்லை.

ஆனால், மோடியின் தலைமையில் இந்தக் குழப்பத்தைக் கடந்து செல்ல இந்துத்துவாவின் 2.0 வடிவம் உதவியாக இருந்தது.

மக்களின் அபிமானமும் அதேவேளையில் தனிப்பட்ட வகையில் இந்துத்துவ கொள்கைகளின் சமரசம் செய்து கொள்ளாத அவரது போக்கும் வெற்றி பெற்றது.

ஆர்.எஸ்.எஸ்.,க்கும் பாஜகவுக்கும் இடையேயான பிணைப்பு இதற்கு முன்னர் இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்ததே இல்லை என்றே கூறவேண்டும்.

ஆனால், இந்து ராஷ்ட்ரம் என்ற கொள்கையை நோக்கி ஒரு வலுவான தலைமையின் பின்னால் செல்லும் இந்தப் பயணமானது உள்ளுக்குள் உராய்வை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிற தலைவர்களும் தாங்கள் அதிகாரமற்றவர்களாக இருப்பதாக புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆளும் கட்சியில் இருந்தாலும் அதிகாரமற்ற சூழலில் திணறுகிறார்கள். இதனால், மோடி மீண்டும் ஆட்சியில் அமர்வதில் அவர்களுக்கு குறைந்த பொறுப்பு இருப்பதாகவே உணர்கின்றனர். 2019 தேர்தலில் இப்போதைய மக்களவை உறுப்பினர்கள் பலருக்கும் அடுத்த வாய்ப்பு வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது. எதிர்ப்பலையை சமாளிக்க மோடி குஜராத் மாதிரியைப் பின்பற்றினால் பழைய உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிட்டுவது கடினம்.

இவை எதுவுமே மோடிக்கும் அவரது தந்திரவாதியான அமித் ஷாவுக்கும் தெரியாமல் இருக்காது. இந்தப் போக்கை மாற்றியமைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், அவர்களின் வெற்றிக்கான வாய்ப்பு அனைவரும்க்கும் விடைதெரிந்த கேள்வியாக இருக்கிறது. ஆனால், ஒரு விஷயம் மிகத் துல்லியமாக தெளிவாக இருக்கிறது.  இந்துத்துவா 2.0 வடிவத்தின் மூன்று முக்கிய அங்கங்களும் கடுமையான நெருக்கடியில் இருக்கின்றன என்பதே அது.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x