Last Updated : 24 Feb, 2019 02:32 PM

 

Published : 24 Feb 2019 02:32 PM
Last Updated : 24 Feb 2019 02:32 PM

தீவிரவாதிகளையும், புகலிடங்களையும் வேரோடு அகற்ற ராணுவம் தீர்மானம்: வானொலியில் பிரதமர் மோடி சூளுரை

புல்வாமா தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, தீவிரவாதத்தையும், அவர்களின் புகலிடங்களையும் வேரோடு அகற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை எப்போதும் அளித்திருக்கிறது என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

 ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டின் 2-வது மற்றும் 53-வது  மன் கி பாத்  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு இன்று  உரையாற்றினார். அவர் கூறியதாவது-

தேசத்தின் 125 கோடி மக்களின் பாதுகாப்புக்கு இருந்த பல வீர மகன்களின் போற்றத்தகுந்த உயிர்த்தியாகத்தைப் பாரத மாதா தாங்கிக்கொண்டாள்.  நாட்டில் உள்ள மக்கள் அமைதியாகத் தூங்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய எல்லையில் உள்ள துணிச்சலான மகன்கள் ஓய்வின்றி இரவுபகலாகப் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

 புல்வாமா தீவிரவாத  தாக்குதலில் நமது துணிச்சல் மிகுந்த வீரர்களின் உயிர்த்தியாகத்தை எண்ணி தேசத்தின் மக்கள் மிகுந்த வலியோடும், கோபத்தோடும் இருக்கிறார்கள். உயிர்த்தியாகம் செய்த வீரர்கள், அவர்களின் குடும்பத்தார் மீது மக்கள் கருணையும், இரக்கமும் கொண்டார்கள்.

 புல்வாமா தாக்குதல் நமக்கு தீவிரவாதத்தையும், அவர்களின் புகலிடங்களையும் வேரோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தை எப்போதும் ஏற்படுத்தி இருக்கிறது. சாதி, வகுப்புவாதம், மதவாதம் உள்ளிட்ட அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் மறந்து நம் நாடு சந்திக்கும் இந்த சவாலை எதிர்கொண்டு, தீவிரவாதத்தை வலிமையாக எதிர்த்துப் போரிட  வேண்டும்.

புல்வாமா தாக்குதல் நடந்த 100 மணிநேரத்துக்குள் நமது படையினர் பழிதீர்த்து, தீவிரவாதிகளையும், புகலிடத்தையும் வேரோடு அழித்துள்ளனர்.

பிஹாரைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ரத்தன் தாக்கூர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தநிலையிலும் அவரின் தந்தை ராம் நிரஞ்சன் தனது 2-வது மகனையும் எதிரிகளை அழிக்க ராணுவத்துக்கு அனுப்பி வைக்கிறேன் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஓடிசாவைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் பிரசன்னா கொல்லப்பட்ட பின்பும், அவரின் மனைவி மீனா தனது ஒரே மகனையும் ராணுவத்துக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி நெகிழ வைத்துள்ளார். இந்த குடும்பத்தாரின் மனோபலத்தையும், உணர்வுகளையும் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அனைவரும் நம் கண்முன் வாழும் உதாரணங்கள்.

ஜனநாயகத்தில் தேர்தல் மிகப்பெரிய திருவிழா. அடுத்த இரு மாதங்கள், நாங்கள் தேர்தலில் பரபரப்பாக இயங்குவோம். நானும் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். ஜனநாயகத்தின் ஆரோக்கியமான பாரம்பரியங்களை மதித்து, மன் கி பாத் நிகழ்ச்சி மே மாதம் கடைசி வாரத்தில் ஒலிபரப்பாகும்.

உங்களின் ஆசீர்வாதத்தால், வரும் மே மாதத்தில் இருந்து நாம் தொடர்ந்து மன் கி பாத் நிகழ்ச்சியில் அடுத்துவரும் ஆண்டுகள் பேசுவோம்.

 இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x